டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
குழந்தைகளின் ஒளிமயமான எதிர்காலத்திற்காக புலமைப்பரிசில்களை வழங்கும் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள்

பல தசாப்தங்களாக, இலங்கையில் உள்ள பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்களின் (RPC) தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த குழந்தைகள், தரமான கல்வியைப் பெறுவதில் குறிப்பிடத்தக்க சமூக-பொருளாதார சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். இருப்பினும், இப்போது முன்னேற்றமடைந்து வரும் புலமைப்பரிசில்கள் மற்றும் கல்வி மானியங்களின் வலைப்பின்னல் இந்த சமூகங்களை சீராக மாற்றியமைத்து வருகிறது. பல்வேறு தோட்டங்களில் செயல்படுத்தப்படும் பல்வேறு கல்வி உதவித் திட்டங்கள், புதிய தலைமுறைப் பல்கலைக்கழக பட்டதாரிகளை உருவாக்கி உள்ளன. இவர்களில் பலர் தங்கள் குடும்பத்தில் முதன்முதலில் உயர்கல்வி பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
புலமைப்பரிசில்களின் அதிகரித்துவரும் தாக்கம்
RPC தோட்டங்களில் உள்ள புலமைப்பரிசில் திட்டங்களின் விகிதம், அளவும் ஊக்கமளிப்பதாகவும், தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் உள்ளன. ஆரம்பப் பள்ளி புலமைப்பரிசில்கள் முதல் பல்கலைக்கழக மானியங்கள் வரை, நூற்றுக்கணக்கான குழந்தைகள் பெரிதும் தேவைப்படும் நிதி உதவியைப் பெற்று வருகின்றனர்.
அகரபத்தனை பிளான்டேஷன்ஸ் பி.எல்.சி.இல், தற்போது 19 மாணவர்கள் பல்வேறு கல்வி நிலைகளுக்கான புலமைப்பரிசில்களால் பயனடைந்து வருகின்றனர். இவற்றில் 5 ஆம் தர புலமைப்பரிசில் நிதி, தலதா நிதி, மாதாந்தம் 5,000 ரூபா பெறும் மஹபொல புலமைப்பரிசில்கள் மற்றும் மேலதிகமாக மாதாந்தம் 4,000 ரூபா பெறும் உதவித்தொகைகள் அடங்கும். இதேபோல், அகரபத்தனைக்கு கீழ் உள்ள கஹகல்ல தோட்டத்தைச் சேர்ந்த நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் வருடத்திற்கு தலா 60,000 ரூபா நிதியுதவி பெறுகின்றனர். அத்துடன், பிட்டரத்மாலீ தோட்டம், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு மஹபொல புலமைப்பரிசில் மூலம் ஆதரவளிக்கிறது.
பலங்கொடை பிளான்டேஷன்ஸ் பி.எல்.சி இன் கீழ் உள்ள, பெலிஹுல்ஓயாவில் அமைந்துள்ள Non Pareil தோட்டம், தனிப்பட்டவிதமாக பல்வேறு கஷ்டங்களை எதிர்கொள்ளும் குழந்தைகளுக்குத் தனது முழு ஒத்துழைபபுகளையும் வழங்குகிறது. உதாரணமாக, தந்தையை வாகன விபத்தில் பரிதாபகரமான விதத்தில் இழந்த ஒரு மாணவர், தனது பள்ளிப் படிப்பைத் தொடர ஆண்டுக்கு 120,000 ரூபா நிதியுதவி பெறுகிறார்.
பொகவந்தலாவையில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், வயம்ப பல்கலைக்கழகம், பேராதனைப் பல்கலைக்கழகம் மற்றும் ருஹுனு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 12 மாணவர்கள், தகுதி மற்றும் தேவை இரண்டையும் அங்கீகரிக்கும் புலமைப்பரிசில்களால் பயனடைந்து வருகின்றனர். எல்பிட்டிய பிளான்டேஷன்ஸின் MJF கல்வி உதவித் திட்டம் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் 100 பல்கலைக்கழக மாணவர்களுக்கும் மற்றும் 80 உயர்தர (Advanced Level) மாணவர்களுக்கும் மொத்தம் 12.4 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான செலவில் ஆதரவளிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக, எல்பிட்டிய பிளான்டேஷன்ஸ் அதன் புலமைப்பரிசில் மானியங்களை சீராக அதிகரித்துள்ளது. பல்கலைக்கழக மாணவர்களுக்கான மானியங்கள் 2008 இல் 1,000 ரூபாவாக இருந்து, 2024 இல் 7,500 ரூபாவாக உயர்ந்துள்ளது.

Merril J. Fernando தொண்டு அறக்கட்டளை மூலம், Talawakelle Tea Estates PLC, 33 மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களை ஒருங்கிணைக்கிறது. இதில் மிக உயர்ந்த மானியம் 360,000 ரூபாவையும் எட்டும். மாணவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த நிதிகள் 2024 இல் கணிசமாக அதிகரிக்கப்பட்டன. இதேவேளை, Watawala Plantations PLC, உயர்தர மற்றும் பல்கலைக்கழகப் படிப்புகளைத் தொடரும் 24 மாணவர்களுக்கு ஆதரவளிக்கிறது. மாணவர் ஒருவருக்கு ஆண்டுக்கு 18,000 ரூபா வரை மானியங்கள் வழங்கப்படுகின்றன.
கஹவத்த பெருந்தோட்ட நிறுவனத்தில், வவுனியா பல்கலைக்கழகத்தில் திட்ட முகாமைத்துவம், விவசாய வள முகாமைத்துவம் மற்றும் கலை போன்ற துறைகளில் நான்கு மாணவர்கள் பட்டப்படிப்பைத் தொடர்கின்றனர். இந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் மொத்த மானியங்கள் தலா 96,000 ரூபா முதல் 360,000 ரூபா வரை உள்ளன. இது அவர்களுக்குக் கிடைக்கும் ஆதரவின் அளவைக் காட்டுகிறது. Kegalle Plantations நிறுவனத்தில், 11 பல்கலைக்கழக மாணவர்கள் தலா 18,000 ரூபா வருடாந்திர மானியங்களைப் பெறுகின்றனர். அதே சமயம் Kelani Valley Plantations நிறுவனம், சாதாரண தரம், உயர்தரம், பல்கலைக்கழகம் மற்றும் 5 ஆம் வகுப்பு வரையிலான 22 மாணவர்களுக்கு ஆதரவளிக்கிறது. ஒரு மாணவருக்கு அதிகபட்சமாக 24,000 ரூபா வரை மானியங்கள் வழங்கப்படுகின்றன. Maskeliya Plantations நிறுவனம், ஒன்பது பல்கலைக்கழக மாணவர்களுக்கு புலமைப்பரிசில்களை வழங்குகிறது. ஒவ்வொருவருக்கும் தலா 24,000 ரூபா வழங்கப்படுகிறது. அதே நேரத்தில் நமுனுகுல பெருந்தோட்ட நிறுவனம், 20 மாணவர்களுக்கு ஆதரவளிக்கிறது. இதில் அதிகபட்ச புலமைப்பரிசில் தொகை 36,000 ரூபா ஆகும்.

முதல் தலைமுறை சாதனையாளர்களின் நம்பிக்கை தரும் கதைகள்
இந்தத் திட்டங்களின் மிக முக்கியமான அம்சம், முதல் தலைமுறைப் பல்கலைக்கழக மாணவர்களின் உருவாக்கம் ஆகும். இவர்கள் தங்கள் சமூகத்திற்கு முன்மாதிரிகளாகவும் திகழ்கின்றனர். Hatton Plantationsஇன் பல்கலைக்கழக புலமைப்பரிசில் திட்டம் 12 மாணவர்களுக்கு ஆதரவளிக்கிறது. ஒவ்வொரு மாணவரும் ஆண்டுக்கு 24,000 ரூபா பெறுகின்றனர். குறிப்பிடத்தக்க வகையில், இவர்களில் அனைவருமே தங்கள் குடும்பத்தில் முதல் தலைமுறைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவானவர்கள் ஆவர்.
அவர்கள் மத்தியில், Carolina Estateஐச் சேர்ந்த குமார் நவநீதப்பிரியா ஒருவர். தற்போது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உயிரியல் முறைமை தொழில்நுட்பம் (Biosystem Technology) படித்து வரும் நவநீதப்பிரியா, Carolina தோட்டத்தின் Trafelgard பிரிவில் இருந்து பல்கலைக்கழகத்திற்குச் சென்ற இரண்டாவது மாணவி ஆவார். தனது கல்விப் பயணம் குறித்து நவநீதப்பிரியா கூறுகையில், “Hatton Plantations PLC இன் ஊழியர்களான என் பெற்றோர், என் கனவுகளுக்கு எப்போதும் ஆதரவாக இருந்திருக்கிறார்கள். அவர்களின் தியாகங்கள் கடினமாக உழைக்க எனக்கு உத்வேகம் அளிக்கின்றன. Gannoruwa Agriculture திணைக்களத்தில் உயிரியல் முறைமை தொழில்நுட்பத்திற்குப் பங்களிப்பதே என் இலக்கு. என் பயணம், எங்கள் தோட்டத்தில் உள்ள அதிகமான மாணவர்கள் உயர்கல்வியைத் தொடர ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்,” என தனது கதையை பகிர்ந்து கொண்டார்.
இதுபோன்ற கதைகள் ஏனைய தோட்டங்களிலும் இருக்கின்றன. இவ்வாறான சமூகங்களிலுள்ள மாணவர்களுக்கு, தோட்ட நிர்வாகம் புலமைப்பரிசுகளை வழங்குவதானது, அடுத்த தலைமுறைகளின் கல்வி மேம்பாட்டில் உள்ள அக்கறையை எடுத்துரைக்கின்றது.

நிதி உதவிக்கு அப்பால்
நிதி உதவிக்கு அப்பால், சில நிறுவனங்கள் டிஜிட்டல் அணுகலின் அவசியத்தை உணர்ந்துள்ளன. நவீன, எதிர்காலத்திற்கேற்ற கல்விக்கு இது ஒரு முக்கிய காரணியாகும். Lalan Rubbers Pvt Ltd, தகுதியுள்ள மாணவர்களுக்கு 181,000 ரூபா மதிப்புள்ள இரண்டு மடிக்கணினிகளையும் மற்றும் 73,999 ரூபா மதிப்புள்ள இரண்டு Tablet PCகளையும் வழங்கியுள்ளது. இந்த உதவிகளைப் பெற்றவர்களில் ஒருவரான மனோகரன் திலக்ஷணி, தோட்டத்தில் பணிபுரியும் ஒற்றைத் தாயால் வளர்க்கப்பட்டவர் என்பதால் மிகவும் சவாலான பின்னணியைக் கொண்டவர். “மடிக்கணினி கிடைத்ததால், நான் விரிவுரைகளைப் பின்பற்றவும், எனது ஆராய்ச்சிகளைச் செய்யவும், உலகத்துடன் இணைந்திருக்கவும் முடிகிறது. என்னிடம் நம்பிக்கை வைத்த அனைவருக்கும் நான் என்றென்றும் நன்றியுள்ளவளாக இருப்பேன்,” என்று சமீபத்தில் அரச பல்கலைக்கழகத்தில் அனுமதி பெற்ற திலக்ஷணி கூறுகிறார்.
இலங்கையில் உள்ள பெருந்தோட்டத் துறை, அரசாங்கப் பங்களிப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் கூட்டு முயற்சிகள், தோட்டக் குழந்தைகளுக்கான கல்வி வாய்ப்புகளை கணிசமாக மேம்படுத்தியுள்ளன. பல தோட்டக் குடும்பங்களுக்கு ஒரு கனவாக இருந்த உயர்கல்வி மற்றும் தொழில்முறை வாழ்க்கையை மாணவர்கள் இப்போது அடைந்து வருகின்றனர். இதன் மூலம், தலைமுறை தடைகளைத் தகர்த்து, உயர்கல்வியைத் தொடரும் கனவு இன்று நிஜமாகியுள்ளது.
இந்த புலமைப்பரிசில்கள், இலங்கையின் பெருந்தோட்ட சமூகங்களின் அறிவுசார் மூலதனத்தில் செய்யப்படும் முதலீடாகும். மேலும், எதிர்கால சந்ததியினர் கடந்த காலப் போராட்டங்களால் கட்டுப்படுத்தப்படாமல், சிறந்த, பிரகாசமான எதிர்காலத்தை கட்டியெழுப்ப அதிகாரமளிக்கப்படுவார்கள் என்பதற்கான உறுதிமொழியும் இது.