தமிழினப் படுகொலை நினைவேந்தல் இன்று – 16வருடங்கள்

இலங்கையில் இறுதிப் போரில் இடம்பெற்ற தமிழினப் படுகொலையை நினைவுகூரும் 16ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றாகும். இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களிலும், புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் தேசங்களிலும் இந்த நினைவு நாள் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

பிரதான நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முற்பகல் 10.15 மணிக்கு கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டு,
10.29ற்கு மணி ஒலி எழுப்பப்பட்டு 10.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்படும். இதைத் தொடர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்படும் சமயத்தில் நினைவேந்தலில் பங்கேற்பவர்களும் தீபங்களை ஏற்றுவர்.
தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்படும்.

பிரதான நினைவேந்தல் நிகழ்வுக்கு முன்னதாக காலை 6.30மணி முதல் முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரையில் போரில் கொல்லப்பட்டவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிதிர்க்கடன் கிரியைகள் இடம்பெறும்.

இறுதிப் போர் கட்டம் 2006 – 2009 மே வரை நீடித்தது. மோதலில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் அகப்பட்டனர். இறுதியாக முள்ளிவாய்க்கால் என்ற சிறு நிலப்பரப்புக்குள் மக்கள் முடக்கப்பட்டபோது 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது. இந்தப் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட மே 18ஆம் திகதி தமிழின அழிப்பின் அடையாள நாளாக தமிழ் மக்கள் நினைவேந்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *