நிலையான வணிகத்தை வலுப்படுத்த, ஐரோப்பிய ஒன்றியத்தின் CSDDD குறித்த உயர்மட்ட மாநாட்டை ஏற்பாடு செய்த SLAEA

கொழும்பு, ஜூலை 2025 – ஜூலை 9 அன்று, இலங்கை ஆடை ஏற்றுமதியாளர்கள் சங்கம் (SLAEA) கொழும்பு 07 இல் உள்ள ஜெட்விங் ஹோட்டலில் ஒரு முக்கிய தொழில்துறை கருத்தரங்கை நடத்தியது. இந்த நிகழ்வு, ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டுறவு நிலைத்தன்மைக்கான உரிய விடாமுயற்சி கட்டளை (CSDDD) இன் வளர்ந்து வரும் முக்கியத்துவத்தைப் பற்றி விவாதிக்க பல்வேறு பங்குதாரர்களை ஒன்றிணைத்தது. இலங்கை ஏற்றுமதியாளர்களிடையே விழிப்புணர்வையும் தயார்நிலையையும் மேம்படுத்துவதே இந்தக் கருத்தரங்கின் நோக்கமாக இருந்தது. இக்கட்டளையின் பரந்த தாக்கம் இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தில், குறிப்பாக ஆடை, தேயிலை மற்றும் ரப்பர் போன்ற முக்கிய துறைகளில், எவ்வாறு இருக்கும் என்பதை இது குறிப்பாக எடுத்துக்காட்டியது.

இந்தக் கருத்தரங்கில் ஆடை உற்பத்தியாளர்கள், ஆலோசகர்கள், சட்ட வல்லுநர்கள், பொதுத்துறை பிரதிநிதிகள், மற்றும் தேயிலை, ரப்பர் போன்ற பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த ஏற்றுமதியாளர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர். இதில், இலங்கையிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழுவின் துணைத் தூதுவர் லார்ஸ் பிரெடல் மற்றும் ஆளுகை நிபுணர் சியாமலி ரணராஜா ஆகியோர் முக்கிய உரைகளை நிகழ்த்தினர். மேலும், வஜிர எல்லேபொல (பணியமர்த்துவோர் சம்மேளனம் – EFC இன் பணிப்பாளர் நாயகம்), எரந்தி பிரேமரத்ன (நிலைத்த வணிக ஆலோசகர்), மகேஷ் யெல்லாய் (ட்ரூஸ்ரேஸ் – தலைமை தயாரிப்பு அதிகாரி) ஆகியோர் அடங்கிய துறைசார் தலைவர்களின் குழுவினரும் தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டனர். நவிந்து முனிதாச (MAS ஹோல்டிங்ஸ் – விநியோகச் சங்கிலி மற்றும் மூலோபாய மேம்பாட்டு முகாமையாளர்) இக்கலந்துரையாடலை நெறிப்படுத்தினார்.

மாநாட்டை ஆரம்பித்து வைத்த SLAEA தலைவர் ரஜித ஜயசூரிய பங்கேற்பாளர்களை வரவேற்று, இந்த விவாதத்தின் முக்கியத்துவத்தை விளக்கினார். “இந்த அமர்வு ஆடைத் தொழில்துறையால் ஆரம்பிக்கப்பட்டது, ஆனால் இதன் நோக்கம் ஆடைத் துறையை விட மிகவும் விரிவானது,” என்று அவர் குறிப்பிட்டார். “CSDDD (நிறுவன ஸ்திரத்தன்மை கடமை கவனிப்பு விதி) ஒரு ஒழுங்குமுறை மாற்றத்தை மட்டும் குறிக்கவில்லை. இது சர்வதேச வணிகம் எவ்வாறு வடிவமைக்கப்படும் மற்றும் நிர்வகிக்கப்படும் என்பதில் ஒரு புதிய அத்தியாயத்தைக் குறிக்கிறது.” என தெரிவித்தார்.

ஜயசூரிய இந்த ஒழுங்குமுறை எந்த பரந்த சூழலில் புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தினார். அவர் மேலும் கூறுகையில், “அதன் தொழில்நுட்பத் தேவைகளுக்கு அப்பால், இலங்கையின் பொருளாதாரச் சூழலில் CSDDD ஐப் பார்ப்பதும் முக்கியம். GSP Plus சலுகைத் திட்டத்திற்கான எமது தொடர்ச்சியான அணுகல், மனித உரிமைகள், சுற்றுச்சூழல் தரநிலைகள் மற்றும் நல்லாட்சிக்கு எமது நாட்டின் நிரூபிக்கப்பட்ட அர்ப்பணிப்பைப் பொறுத்தது.” என தெரிவித்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதித் தூதுவர் லார்ஸ் பிரெடல், பொறுப்புள்ள மற்றும் நிலையான வர்த்தக நடைமுறைகளுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவை மீண்டும் வலியுறுத்தினார். CSDDD இணக்கத்தை ஒரு ஒழுங்குமுறைத் தடையாக மட்டும் பார்க்காமல், ஒரு மூலோபாய நன்மையாகக் கருத வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். “நெறிமுறை வணிகம் ஒரு நல்ல வணிகம்,” என்று அவர் கருத்துத் தெரிவித்தார். “முன்கூட்டியே தயாராகும்வர்கள் முதலீடுகளை ஈர்ப்பதற்கும், ஐரோப்பிய வாங்குபவர்களுடன் நீடித்த கூட்டாண்மைகளை உருவாக்குவதற்கும் சிறந்த நிலையில் இருப்பார்கள்.” என தெரிவித்தார்.

முக்கிய உரையாற்றிய சியாமலி ரணராஜா, உரிய விடாமுயற்சி எவ்வாறு ஒரு தன்னார்வ பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) முன்னெடுப்பிலிருந்து பிணைப்புடைய சட்டக் கடமையாக மாறியது என்பதைத் தெளிவுபடுத்தி, மதிப்புமிக்க சட்ட மற்றும் மூலோபாய நுண்ணறிவுகளை வழங்கினார். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியே உள்ள விநியோகஸ்தர்கள் – இலங்கை உட்பட – ஐரோப்பிய வாங்குபவர்களிடமிருந்து வரும் படிநிலையான தேவைகள் காரணமாக இணங்க எதிர்பார்க்கப்படுகிறார்கள் என்பதை அவர் வலியுறுத்தினார். வெளி மூலமிடப்பட்ட ஏற்றி இறக்கல்கள் முதல் ஊழியர்களின் உணவகங்கள் வரை, விநியோகச் சங்கிலியின் எந்தப் பகுதியும் விலக்கு அளிக்கப்படவில்லை என்று அவர் எச்சரித்தார். “இது ஒரு தத்துவார்த்த விவாதம் அல்ல,” என்று அவர் குறிப்பிட்டார். “இது வியாபாரத்தில் நிலைத்திருப்பது பற்றியது.” என தெரிவித்தார்.

ஒரு ஆற்றல்மிக்க குழு கலந்துரையாடல், டிஜிட்டல் கண்டறியும் கருவிகள், ஆட்சி கட்டமைப்பு மற்றும் வாங்குபவர்களின் எதிர்பார்ப்புகள் போன்ற தலைப்புகளைத் தொட்டு, அமுலாக்கத்தின் செயல்பாட்டு யதார்த்தங்களை ஆராய்ந்தது. இந்த மாற்றம் சிக்கலானதாக இருக்கலாம் என்றாலும், இலங்கைக்கு தனது உலகளாவிய நம்பகத்தன்மையை மேம்படுத்தவும், நீண்டகால வாங்குவோர் நம்பிக்கையை வலுப்படுத்தவும் இது ஒரு குறிப்பிடத்தக்க வாய்ப்பை வழங்குகிறது என்பதில் குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர்.

கூட்டத்தை நிறைவு செய்த ஜெயசூரியா, “இந்த புதிய உலகளாவிய வர்த்தக நிலப்பரப்பின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் எமது திறன், எமது ஆடைத் துறையின் எதிர்காலத்தை மட்டுமல்ல, இலங்கையின் ஏற்றுமதிப் பொருளாதாரத்தின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கும். இன்று அந்த திசையில் ஒரு அர்த்தமுள்ள படியாகும்” என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *