ஸ்பெயின், போர்த்துக்கல், பிரான்ஸில் நீண்ட நேர மின்தடை

ஸ்பெயின் தேசம் முழுவதும், போர்த்துக்கல்லின் பெரும்பகுதிகள், பிரான்ஸ் நாட்டின் பல பகுதிகளில் வரலாறு காணாத மின்தடை ஏற்பட்டிருப்பதால் மக்கள் பெரும் அசௌகரியத்திற்குள் உள்ளாகியுள்ளனர்.

இதனால் வான் வழிப் போக்குவரத்து, தரை வழிப்போக்குவரத்து, இணைய வசதிகள், தொலைபேசிச் சேவைகள் ஆகியன முடங்கியுள்ளன.

ஸ்பெயின் மற்றும் போர்த்துக்கல் தலைநகரங்களிலும் அந்நாட்டு நேரப்படி மதியம் 12.30 மணி முதல் மின் தடை ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த நாடும் இருளில் மூழ்கியிருப்பதைப் பார்க்கும் மக்கள், எப்போது மின் விநியோகம் சீராகும் என்பது தெரியாமல் தவிப்பதாகவும், இதுபோன்றதொரு மோசமான மின் தடையை சந்தித்ததேயில்லை என்றும் கவலை தெரிவித்துள்ளனர்.

மின்சாரத் துறையில் ஏற்பட்டிருக்கும் தொழில்நுட்பக் கோளாறே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.

உடனடியாக நிலைமையை சீர் செய்யும் பணியில் பல்வேறு துறைசார் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதுவரை வரலாறு காணாத வகையில் ஸ்பெயின், பிரான்ஸ், போர்த்துக்கல்லில் ஏற்பட்டிருக்கும் மின் தடையால் 50 இலட்சம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பார்சிலோனாவில் மெட்ரோ ரயில் சேவை முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. ஸ்பெயினில், சுரங்கப் பாதைக்குள் சிக்கியிருக்கும் ரயில்களில் இருக்கும் பயணிகளை மீட்கும் பணியில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டிருப்பதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

பல மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு வாயில்கள் மூடப்பட்டிருப்பதும், கூட்டமாக இருக்கும் கடைகளில் ஆளில்லாமல் இருக்கும் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளியாகி வருகிறது.

பல இடங்களில் போக்குவரத்து சமிக்ஞைகள் செயல்படாததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருப்பதாகவும், ஐரோப்பிய மின் அமைப்பில் ஏற்பட்டிருக்கும் கோளாறுதான் இதற்குக் காரணம் என்றும் வேறு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொலைபேசி கோபுரங்கள் இயங்காததால் கையடக்கத்தொலைபேசி அழைப்புகளை மேற்கொள்ள முடியாமலும், இருண்ட கடைகளுக்குள் மக்கள் அவதிப்படுவதாகவும் கூறப்படுகிறது. டிஜிட்டல் முறை பணப்பரிவர்த்தனைகள் மேற்கொள்ள இயலாமல் மக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

ஜெனரேட்டர்களின் உதவியோடு வைத்தியசாலைகளில் அடிப்படை மருத்துவ சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், ஆனால் கணினிகள் செயழிழந்துள்ளதால் மருந்துகங்கள் செயலற்றுக் கிடப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *