65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை ஜெயிலர்கள், சப்-ஜெயிலர்கள், ஜெய்லர் சார்ஜென்ட்கள், காப்பாளர்கள் (Guards), செவிலியர்கள் மற்றும் மருந்தாளர்கள் ஆகிய பதவிகளுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விபரங்களையும் விண்ணப்ப முறைகளையும் சிறைச்சாலைத் துறையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸை அறிக்கை மூலம் எச்சரித்த டிரம்ப்
காசா பகுதியில் உள்ள அனைத்து பணயக்கைதிகளையும் உடனடியாக விடுவிக்குமாறு ஹமாஸுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளார். அவ்வறிக்கையில் மேலும் அவர், பணயக்கைதிகள் விடுவிக்கப்படாவிட்டால் எந்த ஹமாஸ் உறுப்பினரும் பாதுகாப்பாக இருக்க முடியாது என்று தெரிவித்துள்ளார். காசா பகுதி மக்கள் சிறந்த எதிர்காலத்தை எதிர்நோக்கி இருப்பதால், ஹமாஸை அங்கிருந்து வெளியேறுமாறு ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார்.

