Colombo, 13 August 2026: The Indian Cultural Association (ICA) today announced the launch of the third edition of the ICA International Marathon, scheduled to take place on 13 December 2026 at Galle Face Green, Colombo. The event is set to bring together runners, fitness communities, corporate teams, and international participants for a certified road-running experience…
செலவு சிக்கனம் மற்றும் வினைத்திறனினூடாக SLT குழுமம் உறுதியான 2025 நிதியாண்டை பதிவு செய்துள்ளது
- 2025 ஆம் நிதியாண்டில் குழுமத்தின் வரிக்கு பிந்திய இலாபம் 221% இனால் உயர்ந்து ரூ. 10 பில்லியனாக அதிகரிப்பு
- குழுமத்தின் தொழிற்படு இலாபம் 27% இனால் உயர்ந்து ரூ. 14.2 பில்லியனாக பதிவு
- நிதிச் செலவுகள் 21% இனால் வீழ்ச்சி
- 2025 நிதியாண்டில் SLT PLC வரிக்கு பிந்திய இலாபம் 196% இனால் உயர்ந்து ரூ. 6.2 பில்லியனாக உயர்வு
- 2025 நிதியாண்டில் மொபிடெல், வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 3.1 பில்லியனை பதிவு செய்தது. இது 2,123% வருடாந்த அதிகரிப்பாகும்
- SLT-MOBITEL மொபைல் பிரிவு மூலோபாய அலைக்கற்றை கையகப்படுத்தலினூடாக 5G தலைமைத்துவத்தை உறுதி செய்துள்ளது
SLT குழுமம், 2025 டிசம்பர் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில் பெருமளவு செலவு சேமிப்பை பதிவு செய்துள்ளதுடன், அதிகளவு இலாப வளர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளது. அதனூடாக சகல பிரதான குறிக்கோள்களில் முன்னேற்றகரமான பெறுமதியை அடைந்துள்ளது. கட்டுப்பாடான செலவு முகாமைத்துவம், குறைக்கப்பட்ட நிதிச் செலவுகள் மற்றும் மூலோபாய தொழிற்பாட்டு மேம்படுத்தல்கள் ஆகியவற்றினூடாக உறுதியான வினைத்திறனை வெளிப்படுத்தியிருந்தது.
குழுமத்தின் பெறுபேறுகள்
SLT குழுமம் 2025ஆம் நிதியாண்டை இலாபமீட்டலில் பாரிய முன்னேற்றத்துடன் ஒரு வலுவான ஆண்டாக நிறைவு செய்துள்ளது. கடந்த 2024ஆம் நிதியாண்டில் 3.1 பில்லியன் ரூபாயாகக் காணப்பட்ட வரிக்கு பின்னரான இலாபம், இம்முறை 221 சதவீதத்தினால் சடுதியாக அதிகரித்து 10 பில்லியன் ரூபாயை எய்தியுள்ளது. செலவுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள், நிதிச் செலவுகள் குறைக்கப்பட்டமை மற்றும் நிலையான மற்றும் கையடக்கத் தொலைபேசி பிரிவுகளில் ஏற்பட்ட சீரான வருமான வளர்ச்சி ஆகியன இந்த உயர்வுக்குப் பக்கபலமாக அமைந்தன.
குழுமத்தின் மொத்த வருமானம் 3 சதவீதத்தினால் அதிகரித்து 114.2 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது. இதில் SLT PLC நிறுவனம் 2 சதவீத வருமான வளர்ச்சியையும், Mobitel நிறுவனம் 5 சதவீத வலுவான வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளன. தேய்மானச் செலவுகள் தவிர்ந்த குழுமத்தின் செயற்பாட்டுச் செலவுகள் 72 பில்லியன் ரூபாயாகும். இதன் விளைவாக, வட்டி, வரி மற்றும் தேய்மானத்திற்கு முன்னரான இலாபம் (EBITDA) 5.5 சதவீத முன்னேற்றத்துடன் 42.2 பில்லியன் ரூபாயாகவும், செயற்பாட்டு இலாபம் 26.9 சதவீத அதிகரிப்புடன் 14.2 பில்லியன் ரூபாயாகவும் உயர்வடைந்துள்ளது.
குழுமம் தனது கடன் சுமைகளைக் குறைத்தமை மற்றும் குறைந்த வட்டி வீதங்களினால் ஈட்டிய நன்மைகள் காரணமாக நிதிச் செலவுகள் தொடர்ந்து வீழ்ச்சியடைந்தன. இதன் மூலம், வரிக்கு முந்தைய இலாபம் 88 சதவீதத்தினால் அதிகரித்து 11.3 பில்லியன் ரூபாயை அடைவதற்குப் பங்களிப்பு செய்துள்ளது. குழுமத்தின் வட்டிச் செலவுகள் 21 சதவீதத்தினால் குறைந்து 7,054 மில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது. இது பிரதானமாக SLT PLC நிறுவனத்தின் நிதிச் செலவுகள் குறைக்கப்பட்டமையினால் அடையப்பட்டதாகும்.
SLT குழும தவிசாளர் கலாநிதி. மோதிலால் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “SLT குழுமத்தின் 2025ஆம் நிதியாண்டு நிதிப் பெறுபேறுகள், எமது மூலோபாய நோக்கத்தின் செயல்திறனையும் எமது செயற்பாடுகளின் உறுதியையும் வெளிப்படுத்துகின்றன. கட்டுப்பாடான செலவு முகாமைத்துவம் மற்றும் விவேகமான நிதி மேலாண்மை ஊடாக, எமது நிலையான மற்றும் கையடக்கத் தொலைபேசி வியாபாரங்களை மேம்படுத்தியுள்ளதுடன், இலாபமீட்டலிலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளோம். இந்த வளர்ச்சியானது, 2025ஆம் ஆண்டின் உத்வேகத்தைப் பயன்படுத்தி நீண்டகால நிலையான வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கவும், எமது பங்குதாரர்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும் எமக்குக் கிடைத்துள்ள ஊக்குவிப்பாகும். எமது நம்பிக்கையை வென்ற வாடிக்கையாளர்கள் உட்பட அனைத்துப் பங்குதாரர்களுக்கும் அவர்களது தொடர்ச்சியான நம்பிக்கைக்காக எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அத்துடன், எமது ஊழியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் திறனுக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். குறிப்பாக, அண்மையில் ஏற்பட்ட ‘டிட்வா’ புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட வலையமைப்பு உட்கட்டமைப்புகளைச் சீரமைக்கவும், அத்தியாவசியத் தொலைத்தொடர்பு சேவைகளை விரைவாக மீள வழங்கவும் எமது குழுவினர் அயராது உழைத்தனர். இந்தத் தளராத மன உறுதி, நாம் சேவை செய்யும் சமூகங்களுக்கு அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்தவும், தொடர்பாடல் இணைப்புகளை வலுப்படுத்தவும் எமக்குத் தொடர்ந்து வழிகாட்டும்.” என்றார்.
SLT PLC உறுதியான வளர்ச்சியைப் பதிவு செய்தது
2025ஆம் நிதியாண்டில், SLT PLC 73 பில்லியன் ரூபாய் வருமானத்தைப் பதிவு செய்துள்ளதுடன், இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2 சதவீத வளர்ச்சியாகும். குறிப்பாக, FTTH (Fiber-to-the-Home) பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்ததன் காரணமாக, புரோட்பான்ட் வருமானம் தொடர்ந்து உயர்வடைந்து காணப்பட்டது. அத்துடன், வலையமைப்பு, இணையம் மற்றும் நிர்வகிக்கப்பட்ட சேவைகள் ஊடாக என்டர்பிரைஸ் பிரிவும் நிலையான பங்களிப்பை வழங்கியுள்ளது. மேலும், அரச மற்றும் சிறு, நடுத்தர அளவிலான வர்த்தக (SME) துறைகளும் இந்த ஆண்டில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.
தேய்மானம் (depreciation and amortization) தவிர்ந்த செயற்பாட்டுச் செலவுகள் 46.6 பில்லியன் ரூபாயாகக் குறைவடைந்ததுடன், இது 3 சதவீத அதிகரிப்பாகும். அதேவேளை, வட்டி, வரி மற்றும் தேய்மானத்திற்கு முன்னரான இலாபம் (EBITDA) 26.4 பில்லியன் ரூபாவாக நிலையான மட்டத்தில் காணப்பட்டது. செயற்பாட்டு இலாபம் 27 சதவீதத்தினால் அதிகரித்து 9.3 பில்லியன் ரூபாவாகப் பதிவாகியுள்ளது. மேலும், வழங்குநர் நிதிப் பொறுப்புகள் மற்றும் கடன்களை நிறுவனம் தொடர்ந்து செலுத்தி வந்தமையால் ஏற்பட்ட நிதிச் செலவுக் குறைப்பின் காரணமாக, வரிக்கு பின்னரான இலாபம் (PAT) 2024ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 196 சதவீதத்தினால் அதிகரித்து 6.2 பில்லியன் ரூபாயை அடைந்துள்ளது.
மொபிடெல் குழும வினைத்திறனை வலிமைப்படுத்தியது
2025ஆம் நிதியாண்டில் மொபிடெல் சிறந்த நிதிப் பெறுபேற்றை வெளிப்படுத்தியது. 2024ஆம் நிதியாண்டில் 139 மில்லியன் ரூபாயாகக் காணப்பட்ட வரிக்கு பின்னரான இலாபத்துடன், ஒப்பிடுகையில் இம்முறை 2,123 சதவீதத்தினால் சடுதியாக அதிகரித்து 3.1 பில்லியன் ரூபாயை அடைந்துள்ளது. டேட்டா பாவனையளவு மற்றும் பாவனையாளர் எண்ணிக்கை அதிகரித்ததன் விளைவாக ஏற்பட்ட வலுவான டேட்டா வருமான வளர்ச்சியினால், மொத்த வருமானம் 5 சதவீதத்தினால் அதிகரித்து 47.9 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது. அத்துடன், பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகள், ரோமிங், சாதன விற்பனை, mCash மற்றும் என்டர்பிரைஸ் தீர்வுகள் ஆகியனவும் இந்த வளர்ச்சிக்குப் பங்களித்துள்ளன. வாடிக்கையாளர்களை மையப்படுத்திய சலுகைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட வலையமைப்பு அனுபவம் ஆகியன இந்த வளர்ச்சியை மேலும் உறுதிப்படுத்தின. அனைத்துத் துறைகளிலும் முன்னெடுக்கப்பட்ட வினைத்திறனான செலவு முகாமைத்துவத்தின் ஊடாக, தேய்மானம் தவிர்ந்த செயற்பாட்டுச் செலவுகள் 2 சதவீதம் என்ற மிகக் குறைந்த மட்டத்தில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
வட்டி, வரி மற்றும் தேய்மானத்திற்கு முன்னரான இலாபம் (EBITDA) 11 சதவீதத்தினால் அதிகரித்து 15.1 பில்லியன் ரூபாயாகவும், செயற்பாட்டு இலாபம் 18 சதவீதத்தினால் அதிகரித்து 3.4 பில்லியன் ரூபாயாகவும் உயர்வடைந்துள்ளது. வரிக்கு பின்னரான இலாபத்தில் ஏற்பட்ட இந்த உயர்ந்த வளர்ச்சிக்கு வரி விதிப்பு முறையில் ஏற்பட்ட சீராக்கம் ஒரு முக்கிய காரணமாகும். அதாவது, 2024ஆம் ஆண்டில் வருமானத்தை அடிப்படையாகக் கொண்ட வரி விதிப்பிலிருந்து, 2025ஆம் ஆண்டில் இலாபத்தை அடிப்படையாகக் கொண்ட வரி விதிப்பிற்கு மொபிடெல் மாறியதுடன், அண்மைய முதலீடுகளுக்கான முதலாம் ஆண்டு வரிச் சலுகைகளும் இதற்குப் பக்கபலமாக அமைந்தன.
SLT-MOBITEL இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ரியாஸ் ரஷீத் கருத்துத் தெரிவிக்கையில், “2025 நிதியாண்டு என்பது SLT குழுமத்திற்கு முக்கியமான ஆண்டாக அமைந்திருந்தது. வலுவான செயற்படுத்தல் மற்றும் ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட முகாமைத்துவத்தின் ஊடாக, SLT PLC மற்றும் மொபிடெல் ஆகியன அதிகளவு இலாப வளர்ச்சியினை அடைந்துள்ளன. நாம் 2026ஆம் நிதியாண்டில் புதிய உத்வேகத்துடன் பிரவேசிக்கின்றோம். புத்தாக்கம் மற்றும் சந்தை முன்னிலை ஊடாக வளர்ச்சியை விரைவுபடுத்துவதுடன், எமது சேவைகளை விரிவுபடுத்தவும் வாடிக்கையாளர் ஈடுபாட்டை மேம்படுத்தவும் நாம் அர்ப்பணிப்புடன் உள்ளோம்.” என்றார்.
நான்காம் காலாண்டிலும் தொடர்ச்சியாக இலாபகரத்தன்மை வெளிப்படுத்தப்பட்டது
2025ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில், SLT குழுமம் 3.5 பில்லியன் ரூபாய் வரிக்கு பின்னரான இலாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது 2024ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டுடன் ஒப்பிடுகையில் 51 சதவீத முன்னேற்றமாகும். அத்துடன், இக்காலப்பகுதியில் குழுமத்தின் வருமானம் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1.6 சதவீதத்தினால் அதிகரித்து 29.5 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது. இருப்பினும், நான்காம் காலாண்டில் ஏற்பட்ட அதிகமான செயற்பாட்டுச் செலவுகள் காரணமாக, வட்டி, வரி மற்றும் தேய்மானத்திற்கு முன்னரான இலாபம் (EBITDA) சற்று பின்னடைவைச் சந்தித்தது.
நான்காம் காலாண்டின் பெறுபேறுகளில் SLT PLC நிறுவனம் தொடர்ந்து பிரதான பங்களிப்பை வழங்கியுள்ளது. அதன் வருமானம் 4.4 சதவீதத்தினால் அதிகரித்து 19.1 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது. குறிப்பாக, FTTH பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஏற்பட்ட புரோட்பான்ட் வளர்ச்சி, இந்த வருமான உயர்வுக்குப் பிரதான காரணமாக அமைந்தது.
2025ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில், SLT PLC நிறுவனத்தின் வரிக்கு பின்னரான இலாபம் 2.2 பில்லியன் ரூபாயை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 139 சதவீத வளர்ச்சியாகும். குறைந்த வட்டிச் செலவினால் தொடர்ந்து கிடைத்து வரும் நன்மைகளை இது பிரதிபலிக்கின்றது.
மொபிடெல் 2025ஆம் நிதியாண்டின் நான்காம் காலாண்டில் 12.5 பில்லியன் ரூபாய் வருமானத்தைப் பதிவு செய்துள்ளதுடன், இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1 சதவீத அதிகரிப்பாகும். அத்துடன், இக்காலாண்டில் அங்கீகரிக்கப்பட்ட வரிச் சலுகை காரணமாக, வரிக்கு பின்னரான இலாபம் (PAT) 14 சதவீதத்தினால் அதிகரித்து 1.4 பில்லியன் ரூபாயாகப் பதிவாகியுள்ளது.
டிஜிட்டல் ஸ்ரீ லங்காவிற்கு வலுவூட்டுவதற்கு Fibre விரிவாக்கம்
2025ஆம் நிதியாண்டு முழுவதும் குழுமத்தின் தீர்க்கமான Fibre முதலீடுகளும் அதன் விரிவாக்கமும் மிக முக்கிய பங்கு வகித்தன. குறிப்பாக, நாடு முழுவதும் அதிவேக புரோட்பான்ட் சேவைகளை விரிவுபடுத்தவும், இறுதி மைல் இணைப்புத்திறனை (last-mile connectivity) விரைவுபடுத்தவும் இவை உதவியிருந்தன. Fibre சேவையின் அதிகரித்த பயன்பாடு, வீடுகள் மற்றும் கூட்டாண்மைத் துறையினரிடையே பாரிய கேள்வியை ஏற்படுத்தியதுடன், ‘இலங்கை அரசாங்க வலையமைப்பு’ மற்றும் ‘Cloud’ போன்ற முக்கிய டிஜிட்டல் உட்கட்டமைப்புத் திட்டங்களுக்குப் பெரும் பங்களிப்பை வழங்கியது. இது இலங்கையின் e-governance மற்றும் ICT/BPM துறையின் வளர்ச்சியை ஊக்குவிப்பதில் குழுமத்தின் பங்கை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
5G உடன் அடுத்த தலைமுறை இணைப்புத்திறனை வழங்குவதில் முன்னிலை வகிக்கின்றமை
ஒழுங்குமுறைப்படுத்தப்பட்ட வலையமைப்பு உட்கட்டமைப்பு முதலீடுகள் மற்றும் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய சலுகைகள் ஊடாக, இலங்கையின் கையடக்கத் தொலைபேசி சந்தையில் மொபிடெல் தொடர்ந்து ஒரு பலமான சக்தியாகத் திகழ்கின்றது. 2025ஆம் ஆண்டின் வலுவான நிதி உத்வேகத்தின் அடிப்படையில், 5G அலைக்கற்றையை மூலோபாய ரீதியாகக் கையகப்படுத்தியமை மொபிடெல் நிறுவனத்தின் ஒரு மைல்கல் சாதனையாகும். நாட்டில் 5G சேவையை பொதுமக்களுக்கு முதன்முதலில் அறிமுகப்படுத்திய நிறுவனம் என்ற வகையில், நாடு முழுவதிலும் 5G சேவையை விரிவுபடுத்துவதன் மூலம் இலங்கையின் டிஜிட்டல் மாற்றத்தை மொபிடெல் முன்னெடுத்து வருகின்றது. இது SLT குழுமத்தின் நீண்டகால மூலோபாயத்தை உறுதிப்படுத்துவதுடன், அடுத்த தலைமுறைக்கான இணைப்புத்திறனுக்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது.
டிட்வா புயலைத் தொடர்ந்து தேசத்தின் மீட்சி
டிட்வா புயலின் பின்னர், சேதமடைந்த Fibre பாதைகளைச் சீரமைக்கவும், பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் முழுவதும் ஆயிரக்கணக்கான அணுகல் முனைகளை (Access nodes) மீளமைக்கவும் SLT-MOBITEL இன் செயற்பாட்டு வலையமைப்பு முழுமையாக அணிதிரட்டப்பட்டது. இதன் விளைவாக, பாதிக்கப்பட்ட பகுதிகளில் 98 சதவீதத்திற்கும் அதிகமான இடங்கள் ஒரு வார காலத்திற்குள் வழமைக்குக் கொண்டுவரப்பட்டன. நாட்டின் முக்கியமான தேசிய செயல்பாடுகளைப் பாதுகாப்பதற்காக, மருத்துவமனைகள் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் சேவைகள் மீள வழங்கப்பட்டன. மேலும், கொழும்பு பல்கலைக்கழகத்துடன் இணைந்து ‘247 தேசிய மருத்துவ உதவி மையத்தை’ நிறுவனம் அறிமுகப்படுத்தியது. இது அனைத்து வலையமைப்பு வழங்குநர்களுக்கும் 24 மணிநேர மருத்துவ வழிகாட்டலை வழங்கியது. வர்த்தகச் செயல்பாடுகளுக்கு அப்பாற்பட்டு, ஒவ்வொரு நெருக்கடியான காலத்திலும் நாட்டிற்குச் சேவை செய்யும் SLT-MOBITEL இன் அர்ப்பணிப்பானது, இலங்கையின் நம்பிக்கைக்குரிய ‘தேசிய தகவல் தொடர்பாடல் தொழில்னுட்ப தீர்வுகள் வழங்குநர்’ என்ற அதன் பங்கை மீண்டும் உறுதி செய்துள்ளது.
உறுதியான வளர்ச்சிப் போக்கை தொடர்ந்தும் கட்டியெழுப்புதல்
எதிர்காலத்தை நோக்குகையில், SLT குழுமம், தொடர்ச்சியான Fibre விரிவாக்கத்தின் ஊடாக புரோட்பான்ட் சேவையின் ஊடுருவலை விரைவுபடுத்துவதிலும், போட்டித்தன்மை வாய்ந்த புதிய பக்கேஜ்கள் மூலம் மொபிடெல் பாவனையாளர் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும் கவனம் செலுத்தும். அத்துடன், என்டர்பிரைஸ் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையில் எமது முன்னேற்றத்தைத் தக்கவைத்துக் கொள்வதன் மூலம், வாடிக்கையாளர்கள், வணிகங்கள் மற்றும் இலங்கையின் பரந்த டிஜிட்டல் பொருளாதாரம் ஆகியவற்றிற்கு நீண்டகால பெறுமதியைத் தொடர்ந்து உருவாக்குவதிலும் கவனம் செலுத்தும்.