Bogawantalawa Tea Estates PLC, the world’s first Climate Positive Tea Company, commemorated World Environment Week 2026 through a comprehensive environmental conservation and climate action campaign that brought together government institutions, schools, estate communities, employees, and environmental stakeholders in a collective effort to strengthen biodiversity conservation, ecosystem restoration, and climate resilience, throughout the country. Aligned with…
அடுத்த தலைமுறை பெண் தலைவர்களை வலுவூட்டும் நோக்கில் City of Dreams Sri Lanka மற்றும் SLITHM இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் தினக் கருத்தரங்கு
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா, இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்துடன் (SLITHM) இணைந்து, “Give to Gain” எனும் கருப்பொருளில் விசேட கருத்தரங்கு ஒன்றை அண்மையில் நடத்தியது. இக்கருத்தரங்கில் தொழில்துறை தலைவர்கள், கல்வியாளர்கள் மற்றும் விருந்தோம்பல் துறையில் ஆர்வமுள்ள வல்லுநர்கள் கலந்துகொண்டதுடன், தமது நுண்ணறிவுகள், அனுபவங்கள் மற்றும் புதிய சிந்தனைகளை ஒருவருக்கொருவர் உத்வேகத்துடன் பரிமாறிக்கொண்டனர்.
இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ மாணவர்களை வரவேற்ற இந்த நிகழ்வு, இலங்கையின் சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் பெண்களின் அதிகாரம், தலைமைத்துவம் மற்றும் அவர்களின் வளர்ந்து வரும் பங்கு குறித்த அர்த்தமுள்ள உரையாடல்களுக்கான தளத்தை உருவாக்கியது. இத்துறை முழுவதிலும் எதிர்காலத் திறமையாளர்களை வளர்த்தெடுப்பதற்கும், அனைவரையும் உள்ளடக்கிய தலைமைத்துவத்தை ஊக்குவிப்பதற்கும் சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக இக்கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் வசந்த மந்திரிபாலவின் வரவேற்பு உரையுடன் இக்கருத்தரங்கு ஆரம்பமானது. சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் அடுத்த தலைமுறை பெண் தலைவர்களை உருவாக்குவதில் கல்வி, வழிகாட்டல் மற்றும் வலுவான தொழில்துறை ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை அவர் இதன்போது வலியுறுத்தினார். மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய அவர், இவ்வாறான கருத்தரங்குகள் கல்விசார் அறிவுக்கும், உலக தொழில்துறை அனுபவத்திற்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்க எவ்வாறு உதவுகின்றன என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இந்நிகழ்வின் சிறப்புரையை Hilton Yala Resort-இன் பொது முகாமையாளரும், இலங்கையின் விருந்தோம்பல் துறையில் முதலாவது பெண் பொது முகாமையாளருமான கீதாஞ்சலி சக்ரவர்த்தி நிகழ்த்தினார். இவர் இலங்கை விருந்தோம்பல் பட்டதாரிகள் சங்கத்தின் முதலாவது பெண் தலைவரும் ஆவார். Next Gen She எனும் கருப்பொருளில் உரையாற்றிய சக்ரவர்த்தி, தனது மூன்று தசாப்த கால தொழில்முறைப் பயணம் குறித்துப் பகிர்ந்துகொண்டதுடன், இளம் பெண்கள் தன்னம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் தலைமைத்துவப் பொறுப்புகளை நோக்கிப் பயணிக்க வேண்டும் என ஊக்கமளித்தார்.
தனது சொந்த அனுபவங்களிலிருந்து பெற்ற நடைமுறை ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்ட அவர், வளர்ந்து வரும் இளம் வல்லுநர்கள் தங்களது கருத்துக்களைத் துணிச்சலாக வெளிப்படுத்தவும், வாய்ப்புகளுக்காகத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளவும், உணர்வுபூர்வமான நுண்ணறிவுடன் தலைமை தாங்கவும் மற்றும் ஏனைய பெண்களுக்குத் ஆதரவாக இருக்கவும் ஊக்குவித்தார். விருந்தோம்பல் துறை என்பது மிகுந்த சவால்களும் அர்ப்பணிப்பும் மிக்க ஒரு துறை என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், இத்துறையில் வெற்றிகரமான ஒரு பயணத்தை முன்னெடுப்பதற்கு ஆர்வம் மற்றும் விடாமுயற்சி என்பன மிக இன்றியமையாதவை என்றும் குறிப்பிட்டார்.
இக்கருத்தரங்கில் கொழும்பு சமூகப் பொலிஸ் பிரிவின் தலைமையகப் பொறுப்பதிகாரி மனோஜ் சமரசேகரவினால் முன்னெடுக்கப்பட்ட இணையப் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு அமர்வும் ஒரு முக்கிய அங்கமாக இடம்பெற்றது. இணையவழி பாதுகாப்பு, டிஜிட்டல் விழிப்புணர்வு மற்றும் இணையக் குற்றங்களிலிருந்து பாதுகாப்பு பெறுவதன் முக்கியத்துவம் குறித்து அவர் இதன்போது விளக்கமளித்தார். அத்துடன், குடும்ப வன்முறைகள் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் அத்தகைய சவால்களை எதிர்கொள்ளும் நபர்களுக்குக் கிடைக்கக்கூடிய ஆதரவு பொறிமுறைகள் அமைப்புகள் உள்ளிட்ட பரந்த சமூகப் பிரச்சினைகளையும் அவர் எடுத்துரைத்தார்.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, “Give to Gain” எனும் தலைப்பிலான குழுநிலை கலந்துரையாடல் அமைந்தது. இதில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண் வல்லுநர்கள் ஒன்றிணைந்து, தங்களது தனிப்பட்ட வாழ்வின் சவால்கள் மற்றும் வெற்றிப் பயணங்களைப் பகிர்ந்து கொண்டதுடன், தலைமைத்துவம், சமத்துவம் மற்றும் தொழில் வளர்ச்சி குறித்த தங்களது ஆக்கபூர்வமான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.
இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தின் பொறுப்பு அதிபரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான நிர்மாலி மெண்டிஸ், விருந்தோம்பல் துறையில் பெண்களுக்கு ‘மன உறுதி’ என்பது ஒரு தனித்துவமான பண்பு என்று குறிப்பிட்டார். அத்துடன், ஒருவரது தொழில் வாழ்க்கைப் பயணத்தில் பல்வேறுபட்ட பொறுப்புகளை ஏற்றுக்கொள்வதற்கான விருப்பம் மற்றும் மாறிவரும் சூழலுக்கு ஏற்ப தம்மை மாற்றிக் கொள்ளும் பண்பின் முக்கியத்துவம் குறித்தும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.
சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் சட்ட வல்லுநர் டெதுனி டி சில்வா, பெண்களின் உரிமைகள் அடைந்துள்ள பரிணாம வளர்ச்சி குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார். பல தசாப்தங்களாக நடைபெற்ற போராட்டங்கள் மற்றும் கூட்டு முயற்சிகளின் ஊடாகவே இந்த முன்னேற்றங்கள் சாத்தியமானது என்பதை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார். அத்துடன், ஆதரவான மற்றும் சமத்துவமான பணிச்சூழலை உறுதி செய்வதற்கு மகப்பேறு மற்றும் தந்தைவழி விடுமுறைகள் உள்ளிட்ட பணியிடக் கொள்கைகளை வலுப்படுத்துவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவைப் பிரதிநிதித்துவப்படுத்தி உரையாற்றிய மிஷெல் வஹீத் – டி சில்வா, கேமிங் மற்றும் ஒருங்கிணைந்த விடுதி நடவடிக்கைகள் உள்ளிட்ட பாரம்பரியமாக சவாலானதாக கருதப்படும் தொழில்களில் அதிகமான பெண்கள் தொழில் வாழ்க்கையை மேற்கொள்ள ஊக்குவிக்கும் வகையில், உள்ளடக்கிய மற்றும் பணியாளர்களை மையமாகக் கொண்ட பணியிடங்களை உருவாக்குவதன் முக்கியத்துவத்தைப் பற்றி பேசினார்.
தொழில்முறை சமையலறைத் துறையில் தனது பயணம் குறித்துப் பகிர்ந்துகொண்ட சமையல் நிபுணர் சுதர்ஷனி கிரிந்திகல, சமையல் கலைத் துறையிலுள்ள சவால்கள் மற்றும் அதனூடாகக் கிடைக்கும் நன்மைகள் குறித்து விளக்கமளித்தார். அத்துடன், இளம் பெண்கள் தமது ஆர்வத்தை தன்னம்பிக்கையுடனும், பெருமையுடனும் முன்னெடுக்குமாறு அவர் இதன்போது ஊக்கமளித்தார்.
மாறிவரும் டிஜிட்டல் நிலப்பரப்பு குறித்து தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட சாமிகா கருணாரத்ன, டிஜிட்டல் மாற்றங்கள் விருந்தோம்பல் துறையின் தொடர்பாடல் மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றன என்பது குறித்து விளக்கமளித்தார். வேகமாக மாறிவரும் இன்றைய தொழில்முறை சூழலில், டிஜிட்டல் அறிவு, தகவமைத்துக் கொள்ளும் பண்பு மற்றும் வலுவான தொடர்பாடல் திறன்கள் ஆகியவற்றின் அவசியத்தை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
“Give to Gain” எனும் அதன் கருப்பொருளுக்கு அமைவான ஒரு வலுவான செய்தியுடன் இக்கருத்தரங்கு நிறைவடைந்தது. ஒருவருக்கொருவர் ஆதரவளிக்கவும், அறிவைப் பகிர்ந்து கொள்ளவும், எதிர்கால சந்ததியினருக்குப் புதிய வாய்ப்புகளை உருவாக்கவும் இதன்போது பேச்சாளர்கள் பங்கேற்பாளர்களை ஊக்குவித்தனர். இலங்கையின் விருந்தோம்பல் மற்றும் சுற்றுலாத் துறைகளில் பெண்களுக்கு அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் முற்போக்கான எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதில் வழிகாட்டல், ஒத்துழைப்பு மற்றும் கூட்டு நடவடிக்கை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை இந்நிகழ்வு மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தியது.
இது போன்ற கருத்தரங்குகள் ஊடாக, சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா பன்முகத்தன்மையை ஊக்குவிப்பதிலும், பெண் தலைவர்களை வலுவூட்டுவதிலும் மற்றும் விருந்தோம்பல் துறையின் எதிர்காலத்தை வடிவமைக்கும் அடுத்த தலைமுறையினருக்காக முதலீடு செய்வதிலும் தொடர்ச்சியாக முன்னின்று செயற்பட்டு வருகின்றது.