இலஞ்சம் பெற்ற அரச ஊழியர் கைது

6,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாகப் பெற்றதாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கரடியனாறு பொது சுகாதார பரிசோதகர் அலுவலகத்தில் பணியாற்றும் பொது சுகாதார பரிசோதகர் ஒருவர், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரடியனாறு பிரதேசத்தில் வசிக்கும் நபர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, இன்று (29) காலை 10:49 மணியளவில் முறைப்பாட்டாளரின் வீட்டில் சந்தேக நபர் பணத்தைப் பெற்றுக் கொண்டிருந்தபோது அவரைக் கைது செய்துள்ளனர்.

முறைப்பாட்டாளர் கட்டி வரும் புதிய வீட்டை பரிசோதித்து, அதன் திட்டத்தை அங்கீகரிக்க மறுத்து, கட்டுமானம் தவறு எனக் கூறி, சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்தால் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என சந்தேக நபர் முறைப்பாட்டாளரை அச்சுறுத்தியுள்ளார்.

மேலும், சந்தேக நபர், சட்ட நடவடிக்கைகளைத் தவிர்த்து, கட்டி முடிக்கப்படும் வீட்டை எவ்வித தடையுமின்றி கட்டுவதற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்து, அதற்காக கட்டப்பட்டு வரும் வீட்டின் அமைப்பை அப்படியே பிரதிபலிக்கும் ஒரு திட்டத்தை தானே வரைந்து, அந்தத் திட்டத்தை அங்கீகரிக்க 12,000 ரூபாய் பணம் தேவை எனக் கூறியுள்ளார்.

பின்னர், அந்தத் தொகையில் இருந்து 5,000 ரூபாயை முதலில் சந்தேக நபர் பெற்றுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, இன்று முறைப்பாட்டாளரின் வீட்டிற்கு வந்த சந்தேக நபர், இலஞ்சமாகக் கோரிய மீதித் தொகையில் மேலும் 6,000 ரூபாயைப் பெறுவதற்காக வந்தபோது கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *