இழந்த வளர்ச்சி வாய்ப்புகளின் மதிப்பை இலங்கை கணக்கிடுகிறது

இலங்கையிலிருந்து முதலீடுகளின் வெளியேற்றம் அபிவிருத்தி சிக்கல்களை ஏற்படுத்துகிறது

கிஷோர் ரெட்டி

இலங்கையின் பொருளாதார வளர்ச்சி, தொடர்ந்து பல ஆண்டுகளாக, பல முக்கிய உட்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுத் திட்டங்களின் பின்வாங்கலால் குறிப்பிடத்தக்க பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது. அண்மையில் அதானி கிரீன் நிறுவனம் USD 1 பில்லியன் மதிப்புள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டத்திலிருந்து வெளியேறியமை இதனை மேலும் கேள்விக்குறியாக்குகிறது.

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) நிதியுதவிடனான அளித்த கொழும்பு இலகு ரயில் போக்குவரத்து திட்டம் ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தத் திட்டம் வேகமாக வளர்ந்து வரும் புறநகர்ப் பகுதியான மாலபேக்கும் தலைநகரின் மையத்தில் அமைந்துள்ள கொழும்பு கோட்டைக்கும் இடையிலான பயண நேரத்தை தற்போதைய 45-90 நிமிடங்களிலிருந்து 30 நிமிடங்களாகக் குறைத்து நகர்ப்புற போக்குவரத்தில் புரட்சியை ஏற்படுத்தியிருக்கும் முழுமையான மின்மயமாக்கப்பட்ட வலையமைப்பு கொழும்பில் போக்குவரத்து நெரிசலைக் கணிசமாகக் குறைத்து உமிழ்வு இல்லாத பயண அனுபவத்தை வழங்கியிருக்கும்.

அவ்வாறே, 2020ஆம் ஆண்டில் ‘பங்காளர் ஈடுபாடு இல்லாததால்’ இழந்த USD 480 மில்லியன் மில்லேனியம் சேலஞ்ச் கார்ப்பரேஷன் (MCC) மானியத்தின் இழப்பு முக்கியமாக நகர்ப்புற போக்குவரத்து மேம்பாடுகள் மற்றும் கிராமப்புற பாதை மேம்பாட்டை இழந்ததைக் குறிக்கிறது. இந்த மானியம் மில்லியன் கணக்கான மக்களுக்கு பொது போக்குவரத்தை மேம்படுத்தியிருக்கும் அதே நேரத்தில் விவசாயிகள் தங்கள் பொருட்களை தரமுயர்த்தப்பட்ட மாகாண வீதிகள் மூலம் திறமையாக சந்தைப்படுத்த உதவியிருக்கும்.

ஜேம்ஸ் பக்கரின் USD 400 மில்லியன் மதிப்புள்ள Crown casino திட்டத்தின் பின்வாங்கல், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்குத் துறை வளர்ச்சிக்கு மற்றொரு தவறவிட்ட வாய்ப்பைக் குறிக்கிறது. இந்தத் திட்டங்கள் கூட்டாக ஆயிரக்கணக்கான வேலைகளை உருவாக்குவதுடன் வெளிநாட்டு நேரடி முதலீட்டு (FDI) வரவுக்கு கணிசமாக பங்களித்திருக்கும்.

மிக சமீபத்தில், 2025ஆம் ஆண்டின் தொடக்கத்தில் அவுஸ்திரேலியாவின் United Petroleum இலங்கையிலிருந்து வெளியேறியமை வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்கும் தக்கவைத்துக்கொள்வதற்கும் நாட்டின் முயற்சிகளில் மற்றொரு பின்னடைவைக் குறிக்கிறது. 150 எரிபொருள் நிலையங்களுக்கான திட்டங்களுடன் சந்தையில் நுழைந்து 64 வியாபார ஒப்பந்தங்களை மட்டுமே அடைந்த பிறகு, United Petroleum Australia டிசம்பர் 2024இல் அதன் செயற்பாடுகளை நிறுத்தியது. விலை நிர்ணய சூத்திர சிக்கல்கள் மற்றும் செயற்பாட்டுக் கட்டுப்பாடுகளால் தூண்டப்பட்ட அவர்களின் விலகல், இலங்கையின் வணிகச் சூழலில் பரந்த சவால்களைக் குறிப்பதோடு பொருளாதார மீட்சியின் போது வெளிநாட்டு முதலீட்டைத் தக்கவைத்துக்கொள்ளும் நாட்டின் திறன் குறித்த கேள்விகளை எழுப்புகிறது.

மன்னார் மற்றும் பூநகரியில் அதானியின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை செயற்படுத்த தவறுவதன் மூலம் இலங்கை கணிசமான பொருளாதார நன்மைகளை இழக்க நேரிடும். இதில் ஆண்டுக்கு ரூ. 30 பில்லியன் பெறுமதியான எரிசக்தி செலவுகளின் சேமிப்பு மற்றும் நுகர்வோர் கட்டணங்களில் ஒரு அலகுக்கு ரூ. 17 குறைப்பு என்பன உள்ளடங்கும். இந்தத் திட்டம் ஊடாக குறைக்கப்படும் எரிபொருள் இறக்குமதி, பெறுமதிமிக்க அந்நியச் செலாவணியைச் சேமிக்கவும் நாட்டின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இலக்குகளை அடையவும் உதவியிருக்கும்.

அதானி கிரீன் நிறுவனத்தின் முடிவு உடனடி எரிசக்தி உட்கட்டமைப்பு சவால்களுக்கு அப்பால் இலங்கைக்கு ஒரு முக்கியமான பின்னடைவை அளிக்கிறது, இந்த திட்டத்தின் ரத்து, இலங்கையின் நுணுக்கமான பொருளாதார மீட்பு முயற்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்துவதுடன் முதலீட்டாளர்களின் நம்பிக்கையில், குறிப்பாக இலங்கையை ஒரு மூலோபாய முதலீட்டு இடமாக கருதும் அதிகரித்து வரும் இந்திய முதலீட்டாளர்கள் மத்தியில், குறிப்பிடத்தக்க சரிவை ஏற்படுத்தும்.

அதானி திட்டத்தின் வெளியேற்றத்தை இந்திய முதலீட்டாளர்கள் இலங்கையின் முதலீட்டுச் சூழல் தொடர்பான எச்சரிக்கை சமிக்ஞையாகப் புரிந்துகொள்வார்கள் என்று நம்பப்படுவதுடன் இது எதிர்கால முதலீடுகளுக்கு நாட்டின் ஈர்ப்பை மீள்பரிசீலனை செய்யும். அத்தகைய ஒரு கருத்து இலங்கையின் பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு மூலதனத்தை அர்ப்பணிப்பதற்கான ஒரு பரந்த தயக்கமாக மாறக்கூடும்.

வரலாற்று ரீதியாக, உட்கட்டமைப்பு, எரிசக்தி, தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தி ஆகியவற்றில் முதலீடுகளுடன் இந்தியா இலங்கைக்கு ஒரு முக்கியமான பொருளாதார பங்காளியாக இருந்து வருகிறது. அதானி கிரீன் திட்டத்தின் ரத்து வலுவான, முக்கியமான இருதரப்பு பொருளாதார உறவை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. இந்தத் திட்டம், 20 ஆண்டுகளுக்கு ஒரு அலகுக்கு USC 8.26 என்ற நிலையான கட்டணத்தை வழங்கக்கூடிய செலவு குறைந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தீர்வை வழங்கியிருக்கும். மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுப் பொருளாதார வளர்ச்சிக்கான திறனின் அடையாளமாக இருந்திருக்கும். அத்துடன் இலங்கைக்கு குறிப்பிடத்தக்க பொருளாதார நிவாரணத்தையும் விலை ஸ்திரத்தன்மையையும் வழங்கியிருக்கும்.

இதனால் இழக்கப்பட்ட நிதி நன்மைகள் ஏராளம். இத் திட்டம் இன்றி தற்போதைய விலைகளின் அடிப்படையில், மின் உற்பத்திக்கான உயிர்ச்சுவட்டு எரிபொருள் இறக்குமதிக்காக இலங்கை சுமார் USD 5.5 பில்லியனைச் செலவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செலவினம் நாட்டின் வரையறுக்கப்பட்ட அந்நிய செலாவணி இருப்புக்களில் குறிப்பிடத்தக்க இழப்பைக் குறிப்பதுடன் மிகவும் நிலையான மற்றும் பொருளாதார ரீதியாக திறமையான எரிசக்தி உட்கட்டமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளுக்கு முரணானது.

தற்போதைய மின் உற்பத்தி செலவுகள் வியத்தகு அளவில் வேறுபடுகின்றன. நிலக்கரி அடிப்படையிலான உற்பத்தி ஒரு அலகிற்கு USC 12.52 ஆகவும், எண்ணெய் அடிப்படையிலான உற்பத்தி ஒரு அலகிற்கு USC 26.99 ஆகவும், வெப்ப சார்பற்ற மின் உற்பத்தி நிலையங்கள் ஒரு அலகிற்கு USC 14 முதல் 30 வரை ஏற்ற இறக்கமாகவும் உள்ளன. அதானி திட்டத்தில் முன்மொழியப்பட்ட, அலகிற்கு USC 8.26 குறிப்பிடத்தக்க பொருளாதார நிவாரணத்தையும் விலை நிலைத்தன்மையையும் வழங்கியிருக்கும்.

நீண்டகால விளைவுகள் உடனடி நிதி இழப்புகளுக்கு அப்பால் நீடிக்கும். ரத்து செய்யப்பட்ட ஒவ்வொரு திட்டமும் தொழில்நுட்ப பரிமாற்றம், வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் மூலோபாய பொருளாதார மேம்பாட்டிற்கான தவறவிட்ட வாய்ப்பைக் குறிக்கிறது. நீண்ட காலப் பொருளாதார சவால்களில் இருந்து மீண்டு வரப் போராடும் ஒரு நாட்டிற்கு, நம்பகமான மற்றும் கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக நற்பெயரைப் பேணுவது மிக முக்கியம்.

கொள்கை நிலைத்தன்மை, ஒழுங்குமுறை முன்கணிப்பு மற்றும் நிலையான முதலீட்டு சூழலை உருவாக்குவதற்கான உண்மையான அர்ப்பணிப்பை நிரூபிக்கும் உடனடிச் சவாலை இலங்கை இப்போது எதிர்கொள்கிறது. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை, குறிப்பாக இந்திய பங்காளர்களுடன் மீண்டும் கட்டியெழுப்ப, வெளிப்படையான தகவல் தொடர்பாடல், மூலோபாய கொள்கை சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் நிலையான வளர்ச்சிக்கான நாட்டின் அர்ப்பணிப்பைக் குறிக்கும் உறுதியான நடவடிக்கைகள் தேவைப்படும்.

தேசிய வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கும் நோக்கத்தைக் கொண்ட புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் மீது இலங்கையர்கள் குறிப்பிடத்தக்க நம்பிக்கையை வைத்துள்ளனர். தவறவிட்ட இந்த முதலீட்டு வாய்ப்புகளை நிர்வாகம், கவனமாக மதிப்பாய்வு செய்து தேவையான கொள்கை சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும் என்ற பரவலான நம்பிக்கை உள்ளது. இந்தத் திட்டங்களைத் திரும்பப் பெறுவதற்கு வழிவகுத்த அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், இலங்கை கடந்த கால சவால்களில் இருந்து கற்றுக் கொண்டவை மூலம் வெளிநாட்டு முதலீட்டிற்கு நிலையான, கணிக்கக்கூடிய மற்றும் கவர்ச்சிகரமான சூழலை உருவாக்குவதற்கு இப்போது உறுதிபூண்டுள்ளது என்பதை உலகளாவிய முதலீட்டு சமூகத்திற்கு ஒரு நேர்மறையான சமிக்ஞையை அனுப்ப அரசாங்கத்திற்கு வாய்ப்பு உள்ளது.

இலங்கையில் கிட்டத்தட்ட மூன்று தசாப்த கால வணிக அனுபவம் கொண்ட மிகவும் அனுபவம் வாய்ந்த இந்திய நிபுணரான கிஷோர் துவ்வுரு ரெட்டி வணிகம், கலாச்சாரம் மற்றும் சமூக ஈடுபாடு மூலம் உறவுகளை மேம்படுத்துவதில் ஆர்வம் உடையவர். பல நிறுவனங்களின் முகாமைத்துவ பணிப்பாளராகவும், இலங்கையில் உள்ள இந்திய CEO மன்றத்தின் தலைவராகவும், நாட்டில் முதலீட்டு மேம்பாட்டை ஊக்குவிப்பதில் அவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *