நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
சட்டவிரோத கடத்தல் குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது
மூதூர் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு போலீசார் நடத்திய சோதனையில் சட்டவிரோத கடத்தல் குற்றச்சாட்டில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை (20) மாலை இந்த சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையின் போது, மூதூர் பச்சனூர் பகுதியில் ஒருவரிடமிருந்து 52500 மில்லி கடத்தல் மதுபானமும், மற்றொரு நபரிடமிருந்து 45000 மில்லி கடத்தல் மதுபானமும் மீட்கப்பட்டன.
கடத்தல் மதுபானம் கொண்டு செல்லப்பட்ட மோட்டார் சைக்கிளையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்கள் கிண்ணியா ஈச்சந்தீவு பகுதியைச் சேர்ந்த 46 மற்றும் 42 வயதுடையவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த மூதூர் போலீசார் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

