நகுலேஸ்வரப்பெருமானுக்கு வருடாந்த மகோற்சவம் ஆரம்பம்.

“வேதம் நான்கினும் மெய்ப்பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே”

எம்பெருமான் சிவபெருமானை ஈசனாக தரிசிக்க ஈழத்தில் காணப்படுகின்றன பஞ்சஈஸ்வரங்கள். அதில் தலச்சிறப்பு அதிகம் பெற்ற யாழ்ப்பாண மாவட்டம் கீரிமலையில் அமைந்துள்ள நகுலேஸ்வரத்தில் இன்று(வெப்ரவரி 13) கொடியேற்றம் நிகழ்ந்து வருடாந்த மகோற்சவம் ஆரம்பமானது.

நகுலாம்பிகாதேவி சமேத நகுலேஸ்வரப்பெருமானுக்கு காலை 7மணிக்கு அபிஷேகம் இடம்பெற்று அதனை தொடர்ந்து வசந்தமண்டப பூஜை, ஸ்தம்ப பூஜைகள் நடைபெற்று பக்தர்களின் “அரோகரா” கோசத்தோடு மங்கள வாத்தியங்கள் ஒலிக்க துவஜாரோகணம் என அழைக்கப்படும் கொடியேற்றம் இனிதே நடைபெற்றது.

மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கே அமையப் பெற்ற சிவாலயமாக விளங்கும் நகுலேஸ்சவரத்தில் பதினைந்து நாட்கள் மஹோட்சவம் நடைபெறும். அவ்வண்ணம் எதிர்வரும் 25ஆம் திகதி இரவு பெரிய சப்பறத் திருவிழாவும், 26ஆம் திகதி காலை தேர்த்திருவிழாவும், அன்றிரவு சிவராத்திரி சிறப்பு பூசை வழிபாடுகளும் இடம்பெற்று மறுநாள் 27ஆம் திகதி தீர்த்தோற்சவமும் நடைபெற திருவுளம் கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *