நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பட்டலந்த வதைமுகாம் தொடர்பில் மனுவொன்று சமர்ப்பிப்பு
பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் விசாரணை ஒன்றைக் கோரி முன்னிலை சோஷலிஸக் கட்சியின் நிர்வாக உறுப்பினர் இந்திரானந்த டி சில்வா குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று மனுவொன்றைச் சமர்ப்பித்து அவர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்தார்.
பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் கடந்த அரசாங்கத்தைப் போன்று தற்போதைய அரசாங்கமும் விசாரணைகளை மேற்கொள்ளாமல் இருப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
அத்துடன் அரசாங்கம் இவ்வாறு நடந்துகொள்கின்றமை மிகவும் வருத்தமளிப்பதாக முன்னிலை சோஷலிஸக் கட்சியின் நிர்வாக உறுப்பினர் இந்திரானந்த டி சில்வா தெரிவித்துள்ளார்

