65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை ஜெயிலர்கள், சப்-ஜெயிலர்கள், ஜெய்லர் சார்ஜென்ட்கள், காப்பாளர்கள் (Guards), செவிலியர்கள் மற்றும் மருந்தாளர்கள் ஆகிய பதவிகளுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விபரங்களையும் விண்ணப்ப முறைகளையும் சிறைச்சாலைத் துறையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பயணிகள் பேருந்துகள் தொடர்பில் விஷேட தீர்மானம்
நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
தூர சேவை பயணிகள் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தினமும் அதிகரித்து வருவது கவனிக்கப்பட்டதன் காரணமாக இவ்வாறு விசேட பரிசோதனை மேற்கொள்ளப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இரவு நேரங்களில் தூர சேவை பயணிகள் பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்தி, மது அருந்திவிட்டு வாகனம் செலுத்துதல், போதைப்பொருள் பயன்படுத்தி வாகனம் செலுத்துதல், கவனயீனமாகவும் ஆபத்தான முறையிலும் வாகனம் செலுத்துதல் ஆகிய போக்குவரத்து குற்றங்கள் தொடர்பாக சட்டத்தை அமல்படுத்துமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட தெரிவு செய்யப்பட்ட பொருத்தமான இடங்களில் இரவு நேரங்களில் அதிகாரிகள் குழுக்களை நியமித்து, வீதியில் செல்லும் வாகனங்கள் மற்றும் பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், பொலிஸ் மோட்டார் சைக்கிள் ரோந்து பிரிவு அதிகாரிகள் மூலம் வீதியில் கவனயீனமாக வாகனம் செலுத்தும் பேருந்துகளை பரிசோதனைக்கு உட்படுத்தி சட்டத்தை அமல்படுத்தவும் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய அறிவுறுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

