நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
பவுசர் விபத்தால் சுற்றுசூழலுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு
கொலன்னாவையிலிருந்து வெலிமடை நோக்கி 33,000 லீற்றர் டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிச் சென்ற தனியார் துறை பவுசர் கவிழ்ந்ததில் ஏற்பட்ட எரிபொருள் கசிவு காரணமாக சுமார் 13,000 லீற்றர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பவுசரில் பெட்ரோல் 13,800 லீட்டர் மற்றும் டீசல் 13,200 லீற்றர் ஏற்றிச் சென்ற போது ஹட்டன்-நுவரெலியா கிரிமெட்டிய வீதியில் உள்ள கிளன்ட்ரானன் தோட்ட பகுதியில் வைத்து , பவுசர் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் பவுசர் மூலம் கொண்டு செல்லப்பட்ட எரிபொருள் கசிந்த நிலையில் பிரதேச மக்கள் அதை எடுத்துச் சென்றதை காணக்கூடியதாக இருந்தது.
விபத்து நடந்த நேரத்தில் நிலவிய மழையுடன் கூடிய வானிலை காரணமாக, அதிக அளவு எரிபொருள் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்திற்கும் பவுசர் விபத்துக்குள்ளான இடத்திற்கு கீழே உள்ள பல தேயிலைத் தோட்டங்களில் தோட்டத் தொழிலாளர்கள் குடிநீர் பெறும் பகுதிகளுக்குள் கலந்துள்ளது.
கொட்டகலை பெற்றோலியக் கூட்டுத்தாபன சேமிப்பு வளாகத்தின் அதிகாரிகள், விபத்துக்குள்ளான பவுசரில் மீதமிருந்த எரிபொருளை, பவுசர் வாகனங்களைப் பயன்படுத்தி அகற்றியுள்ளனர்.
மேலும் இது தொடர்பாக நுவரெலியா மாவட்ட செயலாளரின் உத்தரவின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பிரதான வீதி மற்றும் நீர் ஆதாரங்களில் எரிபொருள் கலந்துள்ளதால் சுற்றுச்சூழலுக்கு பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது

