65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை ஜெயிலர்கள், சப்-ஜெயிலர்கள், ஜெய்லர் சார்ஜென்ட்கள், காப்பாளர்கள் (Guards), செவிலியர்கள் மற்றும் மருந்தாளர்கள் ஆகிய பதவிகளுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விபரங்களையும் விண்ணப்ப முறைகளையும் சிறைச்சாலைத் துறையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் கந்தரோடை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், மற்றுமொரு இளைஞன் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து இன்று (மார்ச் 29) இடம்பெற்றுள்ளது. இதில் ஏழாலை தெற்கை சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
கந்தரோடை பகுதியில் வேகமாக பயணித்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

