Sporting excellence achieved for eight consecutive years SLT-MOBITEL, the National ICT Solutions Provider, continued its remarkable sporting legacy with a standout performance at the 40th Annual Mercantile Athletics Championships 2025, bringing home the prestigious Overall Runners-Up title for the eighth year running. Competing over three action-packed days on 14th, 15th and 16th November 2025 at…
‘றிசானா – ஒரு கூண்டுப் பறவை’யுடன் சர்வதேசதிரையுலகில் கால்பதிக்கும் சுமதி ஸ்டூடியோஸ்
ஜெரெமி அயர்ன்ஸ், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் கண்டங்களைக் கடந்து உருவாகும் திரைக்காவியத்தின் பெயரை அறிவிக்கம் ஜகத் சுமதிபால மற்றும் சந்திரன் ரட்ணம்
இலங்கையின் திரைப்படத்துறையின் ஈடு இணையற்ற சாதனையாக, விருது வென்ற இயக்குனர் சந்திரன் ரட்ணம், பல தடவைகளை விருது வென்ற தயாரிப்பாளர் சுமதி ஸ்டூடியோவைச் சேர்ந்;த ஜகத் சுமதிபாலவுடன் கைகோர்த்து, 17 வயது நிரம்பிய றிசானா ரஃபீக்கின் கதையை திரையில் வடிக்கத் தயாராகிறார். 2005ஆம் ஆண்டு சவூதி அரேபியாவில் பணிப்பெண்ணாக வேலை செய்த சமயம் ஒரு குழந்தையின் மரணத்திற்கு காரணமாக இருந்தார் என்ற குற்றச்சாட்டின் கீழ், அந்நாட்டு அரசாங்கம் றிசானாவை சிரச்சேதம் செய்தது. அவருக்கு நேர்ந்த கதியை மனித உரிமை ஆர்வலர்கள் வெகுவாகக் கண்டித்தார்கள். இந்தக் கதை ‘றிசானா – ஒரு கூண்டுப் பறவை’ என்ற திரைப்படத்தின் மையக்கரு.

‘றிசானா – ஒரு கூண்டுப் பறவை’ என்ற படைப்பின் குறிப்பிடத்தக்க அம்சமாக அமைவது, இதில் ஒஸ்கார் விருது வென்ற பிரிட்டன் நடிகர் ஜெரெமி அயர்ன்ஸ், அறுபதுக்கு மேற்பட்ட படங்களில் நடித்து விருதுகள் பல வென்ற வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் பிரதான பாத்திரமேற்பதாகும். ஹாலிவூட் படைப்புக்கள் அடங்கலாக உலக அளவிலான பல திரைப்படங்களுக்காக வேலை செய்த சந்திரன் ரட்ணம், சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஜேம்ஸ் ரட்ணத்தை திரைக்கதை ஆசிரியராக இணைத்துக் கொள்கிறார். அவர் பிரதான பாத்திரத்திற்காக வளர்ந்து வரும் நடிகை விதுஷிக்கா ரெட்டியை அறிமுகம் செய்கிறார். ஹாலிவூட், பாலிவூட் திரையுலகைச் சேர்ந்த புகழ்பெற்ற நடிகர்களுடன் திரையில் தோன்றும் விதுஷிக்கா ரெட்டியின் திறமைகள் இதன் மூலம் மென்மேலும் மெருகேறலாம்.

ஜெரெமி அயர்ன்ஸ் Reversal of Fortune என்ற திரைப்படத்தில் நடித்து சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதை வென்றவர். இது தவிர, கோல்டன் க்ளோப், எமி, எஸ்ஏஸஜி போன்ற விருதுகளையும், பெரும் மதிப்பிற்குரிய சீஸர் மற்றும் Premio Europa Per il Teatro விருதுகளையும் வென்றவர். இந்தப் படைப்பில் இவர் மனித உரிமை ஆர்வலராகவும், ஓய்வு பெற்ற சட்டத்தரணி, பேராசிரியர் ஜூலியன் மைல்ஸாகவும் திரையில் தோன்றுகிறார். படத்தின் பெயர் வெளியீட்டு நிகழ்ச்சியில் உரையாற்றியபோது, ‘இலங்கையில் வேலையாற்றுவது எனக்கு புது அனுபவம். உலகின் இன்னொரு பாகத்தில் திரைப்படத்துறை துடிப்பாக இயங்குவதை நான் வரவேற்கிறேன். இயக்குனர் சந்திரன் ரட்ணத்துடன் வேலை செய்து, 21ஆம் நூற்றாண்டில் நிகழ்ந்திருக்கக் கூடாத மரணதண்டனைக் கதையின் இருண்ட பக்கங்கள் மீது வெளிச்சம் பாய்ச்ச கிடைப்பதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்,’ என்று தெரிவித்தார்.

ஹாலிவூட் ஜாம்பவான்கள் ஸ்ரீபன் ஸ்பீல்பேர்க், டேவிட் லீன், கரொல் ரீட், ஜோர்ஜ் லூக்கஸ், ஜோன் பூர்மன், ரெஜிஸ் வோக்னியர் ஆகியோருடன் வேலை செய்து, நூற்றுக்கு மேற்பட்ட சர்வதேச திரைப்படங்களில் தமது பெயரைப் பதித்த சந்திரன் ரட்ணம், Witness to a Killing, Pilgrimage, The Road from Elephant Pass and A Common Man ஆகிய திரைப்படங்களுக்காக விருது வென்றவர். சர்ச்சைக்குரிய விடயங்களுக்குள் அச்சமின்றி ஆழமாகச் செல்லக்கூடிய இயக்குனராக பெயர் பெற்றவர், அவர். ‘றிசானா நஃபீக்கின் கதை என்னை மிகவும் பாதித்தது. அது சொல்லப்பட வேண்டிய கதையென்பதை நான் உணர்ந்தேன்,’ என்று அவர் கூறினார். ‘அதிர்ஷ்டவசமாக ஜகத் சுமதிபாலவை சந்தித்த சமயம், எனது கனவு நனவானது. இந்தத் திரைப்படத்தில் சர்வதேச புகழ்பெற்ற நடிகர்களை பாத்திரமேற்கக் செய்வதன் மூலம், சொல்ல வேண்டிய செய்தியை உலகம் அறியச் செய்கிறேன். இந்தக் கதை மக்களின் மனதில் அலையை உருவாக்கி, றிசானா போன்றவர்கள் பற்றி கூடுதல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் என நம்புகிறேன்,’ என்று சந்திரன் ரட்ணம் கூறினார்.

தொழில்முறையில் பாலே நடனம் கற்று, நடிகையாக பரிணமித்து, ஆறு மொழிகளை சரளமாக பேசக்கூடிய வரலட்சுமி சரத்குமார், இந்தப் படத்தில் டொக்டர் ராணி செல்வம் என்ற பல் மருத்துவராக நடிக்கிறார். தெற்காசியாவின் சகல மொழிகளிலும் 30இற்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கும் வரலட்சுமியின் வாய்ப்பெல்லைகள், இலங்கையின் படமொன்றில் நடிப்பதன் மூலம் மென்மேலும் விஸ்தாரம் பெறுகின்றன. ‘நாம் வாழும் காலத்தில் மிகச் சிறந்த இயக்குனர்களில் ஒருவரான சந்திரன் ரட்ணத்தின் இயக்கத்தில், நான் சிறுவயது முதல் பார்த்து வளர்ந்த ஆதர்ச நடிகர் ஜெரெமி அயர்ன்ஸூடன் சேர்ந்து நடிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்,’ என்று அவர் கூறினார். ‘றிசானாவின் கதை எனது ஆன்மாவைத் தொட்டது. பெண்களின் உரிமைகளுக்காக போராடுபவள் என்ற அடிப்படையில், ராணி என்ற பாத்திரம் எனது போராட்டத்தைப் பிரதிபலிக்கும்’.

திரைக்கதை ஆசிரியர் ஜேம்ஸ் ரட்ணம் கருத்து வெளியிடுகையில், ‘இன்றைய உலகையும் பாதிக்கும் மனித உரிமை நெருக்கடியை றிசானா நஃபீக்கின் பாத்திரம் பிரதிபலிக்கிறது. அந்த சிறுமியின் கதையை சொல்லி, அவளுக்காக குரல் கொடுப்பதன் மூலம் அவளை மறந்து விடாமல் இருக்கலாம்,’ என்று அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் வரவேற்புரை நிகழ்த்திய சுமதி ஹோல்டிங்ஸின் தலைவரும், றிசானா திரைப்படத்தின் தயாரிப்பாளரும், ஐம்பது வருட கால திரை மரபில் இருந்து வருபவருமான ஜகத் சுமதிபால கருத்து வெளியிடுகையில், ‘சுமதி ஸ்டூடியோஸ் திரைப்படங்களை மாத்திரம் தயாரிக்கவில்லை. நாம் மைல்கற்களை நடுகிறோம். இதன் காரணமாக, தேசிய திரைத்துறையில் ஆகக்கூடுதலான விருதுகளை வென்ற திரைப்படக் கூடமாக நாம் மிளிர முடிகிறது,’ என்றார். சுமதிபாலவின் தந்தையார் யூ.டபிள்யூ.சுமதிபால 1977இல் அஹசின் பொலவட்ட என்ற சிங்கள திரைப்படத்திற்காக கெய்ரோ திரைப்பட விழாவில் சர்வதேச விருது வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்தவர். தமது தாய் மிலினா இலங்கையின் முதலாவது பெண் தயாரிப்பாளர்களுள் ஒருவராக தொடர்ச்சியாக விருதுகளை வென்று, வரலாற்றில் ஆகக்கூடுதலான விருதுகளை வென்ற திரைப்படக் கலையகமாக சுமதி ஸ்டூடியோஸை உயர் பீடத்தில் அமரச் செய்த விதத்தையும் அவர் நினைவுகூர்ந்தார்.

இப்போது நாங்கள் வெறுமனே கதைகளை சொல்வதற்காக அன்றி, அவற்றை எல்லைகளுக்கு அப்பால் சென்று உலகளாவிய பார்வையாளர்கள் முன்னிலையில் எடுத்துரைக்க வேண்டியுள்ளது என்;று சுமதிபால தெரிவித்தார். ‘சுமதி ஸ்டூடியோஸ் இலங்கை சினிமாவின் சகாப்தத்தை தோளில் சுமக்கிறது. இந்தத் துறைக்கான அடித்தளத்தை இட்ட எனது தந்தையின் தொலைநோக்கில் இருந்து, அச்சமின்றி புதுமை படைத்தல் வரை எனது வழிகாட்டலில் அடுத்த தலைமுறை வரை பயணத்தை தொடர்ந்து முன்னெடுக்கிறோம். இந்தத் தலைமுறை திரை சகாப்தத்தை அடுத்த கட்டத்திற்கு இட்டுச் செல்கையில், இந்தத் திரைப்படம் படைப்பாற்றலின் தொடர்ச்சிக்கு நாம் வழங்கும் பரிசு,’ என்றும் அவர் கூறினார்.

