வட மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்துவது தொடர்பில் சிறப்பு கலந்துரையாடல்

வட மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் செலவு செய்வது தொடர்பாக கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நேற்று (ஏப்ரல் 03) நடைபெற்றது.

வழக்கமாக வடமாகாணத்திற்கு ஒதுக்கப்படும் நிதி முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்தாமல் திரும்பி அனுப்பப்படுவதாக ஒரு குற்றச்சாட்டு இருந்துவரும் நிலையில் அண்மையில் இது தொடர்பான பேசுபொருள் அதிகமானதை முன்வைத்து இம்முறை தங்களுக்கு வழங்கப்பட்ட நிதியை முறையாக பயன்படுத்த முனைப்புடன் இந்த கலந்துரையாடலை முன்னெடுத்திருக்கின்றார்கள்.

வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன், திலகநாதன் ஆகியோருக்கும் இடையில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியை செலவு செய்வதில் உள்ள பிரச்சினைகள் மற்றும் முன்னுரிமைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.

மேலும் அரசாங்கத்துக்கு முன்வைக்க வேண்டிய மேலதிக திட்ட முன்மொழிவுகள், வடக்கின் தேவைப்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் இவற்றை அரசாங்கத்தின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதி அமைச்சர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தக் கலந்துரையாடலில் குறிப்பிட்டனர்.

கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வனவளத்திணைக்களம், வன உயிரிகள் திணைக்களத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு, மேய்ச்சல் தரவையின்மை, சட்டவிரோத மணல் அகழ்வு பொலிஸார் அதற்கு உடந்தையாகச் செயற்படுகின்றமை தொடர்பில் சுட்டிக்காட்டினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *