நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
வானிலையில் பாரிய மாற்றம்
இம் மாதம் 22ஆம் திகதியளவில் தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் புதிய குறைந்த அழுத்தப் பிரதேசம் உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இக் குறைந்த அழுத்தப் பிரதேசம் மேலும் வலுவடைந்து இலங்கையின் வடக்கு கரையோரத்தை அண்டியதாக நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
இதனால் வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
சப்ரகமுவ, மத்திய, ஊவா, மேல், தென் மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலையில் பனி மூட்டமான நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

