Chamber of Lankan Entrepreneurs (COYLE) and the Japan External Trade Organization (JETRO) officially signed a Memorandum of Understanding (MoU) today, a significant step toward strengthening international collaboration and fostering workplace well-being. The partnership is aimed at fostering mutual development and promoting a culture of “Health and Productivity Management” across Sri Lanka’s corporate sector. Held in…
மக்கள் இறைமையை மிக கவனமாக உபயோகிக்க வேண்டும் -சுமந்திரன்

வடக்கு மக்களது ஆணை எங்களிடத்தில் இருக்கிறது என கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு நாம் சரியான செய்தியை சொல்ல வேண்டும். இறைமையை உபயோகிக்கின்ற போது கவனமாக உபயோகிக்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் நேற்று (27) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தல் என்பது பிற்போடப்பட்ட தேர்தல். முன்னர் நடந்திருக்க வேண்டிய தேர்தல். காலம் தாழ்த்தி தற்போது நடைபெறுகிறது. இந்த தேர்தல் ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் நடந்திருந்தால் அப்பொழுது நாட்டில் இருந்த சூழ்நிலை சற்று வித்தியாசமானதாக இருந்திருக்க கூடும். ஆனால் தற்போது இந்த தேர்தல் நடைபெறும் சூழ் நிலையில் எங்களுக்கான சவால்கள் அதிகமாக இருக்கின்றன.
புதிய சவால்களை எப்படி எதிர் நோக்குவது என்று யோசித்து செயலாற்ற வேண்டிய நிலையில் இருக்கின்றோம். மக்கள் மத்தியில் பாரம்பரிய கட்சிகளுக்கு எதிரான ஒரு மனப்பாங்கு உருவாகி இருக்கிறது. பொதுவாக இந்த நாட்டை குட்டிச் சுவர்களாகியது நீண்டகாலம் இருந்த கட்சிகள் என அங்கலாய்த்து, அடிப்படையான மாற்றம் தேவை என்று தான் பாரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அரசியல் நிலையில் முன் எப்போதும் இல்லாத மாற்றம் ஏற்பட்டுள்ளது. மக்கள் ஒரு எதிர்பார்ப்போடு இந்த மாற்றங்களை கொண்டு வந்திருந்தார்கள். எவரிடமும் நம்பிக்கை வைத்து கொண்டு வந்தார்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் முன்பு இருந்தவர்களிடம் நம்பிக்கை இழந்தமையால் தான் அந்த மாற்றம் நிகழ்ந்திருக்கின்றது.
இலங்கை தமிழரசுக் கட்சி தொடர்ச்சியாக தங்களுக்கு சேவையாற்றிக் கொண்டிருக்கிறது. தமது உடனடித் தேவைகளை தீர்க்கின்ற அளவில் செயற்படுகின்றோமா என்பது பற்றி மக்கள் மத்தியில் ஒரு கேள்வி இருக்கிறது.
நாங்கள் எமது இனத்தின் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட கட்சி. அதை நாங்கள் செய்கின்றோம். அதை நாங்கள் சொல்கின்றோம். ஆட்சி அதிகாரங்கள் எமது கைகளில் வந்து சேர வேண்டும். தமிழ் மக்களின் கைகளில் வர வேண்டும் என 75 வருடமாக உழைக்கின்ற, முயற்சி செய்கின்ற ஒரு கட்சி. அதில் மக்களுக்கு சந்தேகம் இல்லை.
அதை செய்கின்ற அதேவேளை, மக்களுக்கு நாளாந்த பிரச்சனைகள் பல உள்ளன. உள்ளுராட்சி மன்றங்களிடத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் நாளாந்த பிரச்சனைகளை சந்திக்கக் கூடியதான அதிகாரங்கள். ஆகையினால், தான் உள்ளுராட்சி மன்றங்களின் அதிகாரங்களை அறிந்து அதை நாம் செயற்படுத்துகின்ற போது, மக்களுடைய நாளாந்த பிரச்சனைகளை தீர்க்கின்ற வகையில், அதிகாரங்கள் எமது கைகளில் வருகின்ற போது அதை திறம்பட செயலாற்றுபவர்கள் நாங்கள் என்பதை மக்களுக்கு காண்பிக்க முடியும். அதை இவர்கள் செய்வார்களா இல்லையா என்ற சந்தேகம் இருக்கிறது.
ஏனெனில், எமது வாய்களில் இருந்து வருகின்ற வார்த்தைகள் எல்லாம் எமது விடுதலை பற்றியதும், அதிகார பகிர்வு பற்றியதும், தேசத்தின் விடுவிப்பு பற்றியதாகவும் தான் இருக்கிறது. அது தவறில்லை. அதற்காகத் தான் நாங்கள் இருக்கின்றோம்.
அதற்காக பேசுகின்ற, அதேவேளை அடிமட்டத்தில் மக்களது நாளாந்த பிரச்சனைகள் சம்மந்தமாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு கொடுத்திருக்கின்ற அதிகாரங்களையும் நாம் பிரயோகிக்க வல்லவர்கள் என்பதையும் காண்பிக்க வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
அந்த அதிகாரங்களை கையாள தெரியாதவர்கள் என்று மக்கள் நினைத்தால் அரசியல் அதிகாரங்களை கோருவது தேவையற்றது எனவும், சரியாக கையாண்டால் இவர்களிடம் கொடுப்பது நல்ல விடயம் எனவும் கருதுவார்கள். உள்ளூராட்சி சபைக்கு அதிகாரங்கள் இருக்கின்றன. அதை கேட்டுப் பெற வேண்டியதில்லை. மாகாண சபைக்கு அதிகாரங்களை கேட்டு பெற வேண்டும். சமஸ்டிக்காக உழைக்கின்றோம்.
மாற்றத்தினால் மக்களது வாழ்க்கையில் எதுவித மாற்றமும் நிகழப் போவதில்லை என்கின்ற சந்தேகம் தற்போது மக்களிடம் வந்துள்ளது. 6 மாத காலத்திற்குள் வந்துள்ளது. அந்த நம்பிக்கை வீண் போகின்ற வகையில் இந்த ஆட்சி செல்கின்ற திசையை பார்த்து மக்களது மனதில் உதித்துள்ளது.
பொறுப்பு கூறல் சம்மந்தமாக பல சர்வதேச தலைவர்களுடன் பேசி, பல விதமான பொறிமுறைகள் ஊடாக அழுத்தங்களை நாம் கொடுத்திருக்கின்ற போது, தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் அந்தக் காலத்தில் பேசாமல் இருந்தார்கள்.
2016, 2017 ஆம் ஆண்டுகளில் காணாமல் போனவர்களுக்கான அலுவலகத்தை அமைக்க பாராளுமன்றத்தில் நாம் செயற்பட்ட போது எங்களுக்கு ஆதரவாக செயற்பட்டார்கள். அது குறித்து பேசினார்கள். நிலம் விடுவிக்கப்பட வேண்டும் என்றார்கள். பயங்கரவாத தடைச்சட்டம் முற்றாக நீக்கப்பட வேண்டும் என்பதில் எங்களை விட கூடுதலாக சொன்னார்கள். அந்த நிலைமைகள் 6 மாத காலத்திற்குள் தலைகீழாக மாறி விட்டது. எதிர்கட்சியில் இருந்ததைப் போல் அவர்கள் இப்போது இல்லை.
வடக்கு மக்களது ஆணை எங்களிடத்தில் இருக்கிறது என கொக்கரிக்கின்ற ஆட்சியாளருக்கு நாம் சரியான செய்தியை சொல்ல வேண்டும்.
இறைமையை உபயோகிக்கின்ற போது கவனமாக உபயோகிக்க வேண்டும். தமிழ் மக்களது ஆணை வந்து விட்டது. தீர்வு நாங்கள் கொடுப்பது தான் என அவர்கள் சொல்ல தலைப்படுவதை முளையில் கிள்ளி எறிய வேண்டும்.
கிழக்கில் மட்டக்களப்பை தவிர, நிலைமை மோசமாக உள்ளது. வடக்கில் இருந்து வரும் செய்தி மிக முக்கியமான செய்தியாக இருக்க வேண்டும்.
மாநகர சபையின் ஆட்சி அதிகாரம் முக்கியமானவை. அதன் சொல்லிலேயே ஒரு அடையாளம் இருக்கிறது. அது எமது கைகளில் இருக்க வேண்டும். அதற்காக அனைவரும் உழைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.