ஸ்ரீ தலதா வழிபாடுகளுக்காக இராஜதந்திரிகள் ரயிலில் பயணம்

16 வருடங்களுக்குப் பின்னர் நடைபெறும் “ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று  வெள்ளிக்கிழமை  (18) பிற்பகல் 12.30 மணிக்கு ஆரம்பமானது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள் மற்றும் இராஜதந்திரிகளும்  நிகழ்வில் கலந்துக் கொண்டுள்ளனர்.

வியட்நாம், பங்களாதேஷ், இந்தோனேசியா, நேபாளம், நெதர்லாந்து, இந்தியா, மியன்மார், பலஸ்தீன், பிரான்ஸ், நியூசிலாந்து, கியூபா, எகிப்து, ஜப்பான், பிரித்தானியா, தாய்லாந்து, கனடா மற்றும் கொரியா ஆகிய நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்தக் குழு, இன்று காலை 7.00 மணியளவில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து கண்டிக்கு புறப்பட்ட ரயிலின் சிறப்பு கண்காணிப்புப் பெட்டியில் பயணித்தது.

இலங்கை மீண்டும் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்து வருவதுடன், இதுவரை நாட்டைச் சூழ்ந்திருந்த அனைத்து தடைகளும் நீக்கப்பட்டு, நாட்டிற்குள் சகவாழ்வு நிலைநாட்டப்பட்டுள்ளது என்ற செய்தியை நட்பு நாடுகளுக்கு தெரிவிக்கவும், அந்தப் பயணத்திற்கு அவர்கள் அனைவரின் ஆதரவையும் பெறும் நோக்கத்துடனும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கண்டியை நோக்கிப் பயணித்த இந்த குழு, முதலில் மகாவலி ரீச் ஹோட்டலை சென்றடைந்ததுடன், அங்கு ஹெல பாரம்பரியத்திற்கு ஏற்ப அவர்களுக்காக சிறப்பு சிங்கள-தமிழ் புத்தாண்டு விருந்துபசாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அங்கு இந்தக் குழுவுடன் மற்றொரு இராஜதந்திரிகள் குழுவும் இணைய திட்டமிடப்பட்டுள்ளது. பின்னர் 44 பேர் கொண்ட இந்தக் குழு “ஸ்ரீ தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வில் பங்கேற்க தலதா மாளிகைக்குச் செல்லவுள்ளதோடு, அதன் பின்னர் அந்தக் குழு அதே ரயிலில் மீண்டும் கொழும்புக்கு நோக்கித் திரும்பும்.

ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கமைய மல்வத்து, அஸ்கிரி தேரர்களின் அனுசாசனையுடன் வரலாற்று சிறப்புமிக்க கண்டி தலதா மாளிகையின் தியவடன நிலமேவின் வழிகாட்டுதலின் கீழ், ஏற்பாடு செய்யப்பட்ட “”ஸ்ரீ தலதா வழிபாடு” இன்று முதல் ஏப்ரல் 27 ஆம் திகதி வரை 10 நாட்களுக்கு நடைபெறும்.

ஆரம்ப நாளான இன்று (18) பிற்பகல் 3.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும், பக்தர்களுக்கு “தலதா” புனித தந்த தாதுவை வழிபடுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், நாளை (19) முதல் தினசரி பிற்பகல் 12.00 மணி முதல் மாலை 5.00 மணி வரையிலும் இந்த சந்தர்ப்பம் வழங்கப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *