65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை ஜெயிலர்கள், சப்-ஜெயிலர்கள், ஜெய்லர் சார்ஜென்ட்கள், காப்பாளர்கள் (Guards), செவிலியர்கள் மற்றும் மருந்தாளர்கள் ஆகிய பதவிகளுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விபரங்களையும் விண்ணப்ப முறைகளையும் சிறைச்சாலைத் துறையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்னவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் – பிணையும் வழங்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் பியங்கர ஜயரத்ன ஊழல் குற்றச்சாட்டில் ஈடுபட்டதாக தெரிவித்து இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட வழக்கிற்கு கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று(வெப்ரவரி 18) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பியங்கர ஜயரத்ன சிவில் விமான சேவைகள் அமைச்சராக செயற்பட்ட காலப்பகுதியில் 494,000 ரூபாவை சிலாபத்திலுள்ள வங்கியொன்றில் வைப்பிலிடுமாறு அதிகாரிகளை கோரியதன் ஊடாக இலஞ்ச ஊழல் தடைச்சட்டத்தின் கீழ் தவறிழைத்துள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் பியங்கர ஜயரத்னவை தலா 5 இலட்சம் ரூபா பெறுமதியான 2 சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றின் நீதிபதி மஞ்சுள திலக ரத்ன உத்தரவிட்டுள்ளார்.

