தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த காலத்தில் நாட்டில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பிக்க முயற்சி செய்ததோடு, கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார். இந்த தேசத்துரோக நடவடிக்கைகளுக்காகவே அவருக்கு இந்த உச்சபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பொதுநிர்வாக அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றம்
2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் நான்காவது நாளான இன்று (19) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கான செலவுத்தலைப்பு (130) 94 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
குழு நிலை விவாதத்தின் பின்னர் பி.ப 6.10 மணியளவில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குறித்த செலவுத்தலைப்புக்கு வாக்கெடுப்பைக் கோரினார். இதற்கமைய நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் குறித்த செலவுத்தலைப்புக்கான ஒதுக்கீட்டுக்கு ஆதரவாக 103 வாக்குகளும், எதிராக 9 வாக்குகளும் அளிக்கப்பட்டன. குறித்த அமைச்சின் ஏனைய செலவுத் தலைப்புக்கள் வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டன.
அத்துடன், இன்று விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட தொழில் அமைச்சுக்கான செலவுத்தலைப்பு வாக்கெடுப்பு இன்றி நிறைவேற்றப்பட்டது.
இதேவேளை, கொழும்பு துறைமுகத்திலிருந்து 323 கொள்கலன்களை கட்டாய பௌதீகப் பரிசோதனைக்கு உட்படுத்தாமல் விடுவித்தமை தொடர்பில் ஆராய்ந்து, அறிக்கையிடுவதற்காகவும், அது குறித்த முன்மொழிவுகளையும் விதப்புரைகளையும் சமர்ப்பிப்பதற்காகவுமான பாராளுமன்ற விசேட குழுவை அமைப்பது தொடர்பான பிரேரணையும் அங்கீகரிக்கப்பட்டது.

