சிலாபத்தில் கஞ்சா பொதிகளுடன் ஒருவர் கைது.

சிலாபம் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்றில் சுமார் 247 கிலோ எடை கொண்ட கஞ்சா பொதிகளுடன் சந்தேகநபர் ஒருவர் சிலாபம் பிராந்திய ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சிலாபம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (வெப்ரவரி 25) இரவு சிலாபம் பிராந்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது மெரவல பாலத்துக்கருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்ட போது காரின் பின் பகுதியில் சூட்சுமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் 114 கஞ்சா பொதிகள் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளன.

சுமார் 247 கிலோ 946 கிராம் எடை கொண்ட கஞ்சா பொதிகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் கார் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட கார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

கைதான சந்தேகநபர் 36 வயதுடைய திம்பில்லே பகுதியை சேர்ந்தவர் ஆவார். குறித்த நபர் கஞ்சா பொதிகளை மெரவல பகுதியில் இருந்து முன்னேஸ்வரம் நோக்கி கொண்டு செல்லும் போதே இவ்வாறு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மேலும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் மற்றும் சந்தேகநபர் தொடர்பில் சிலாபம் பொலிஸ் தலைமையகம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *