செலான் வங்கி, நங்கடவர கனிஷ்ட வித்தியாலயத்தில் தனது 292ஆவது ‘பஹசர’ நூலகத்தை திறந்ததன் ஊடாக நிதியறிவு மிக்க எதிர்காலத்தை ஆதரிக்கிறது

கல்வி மற்றும் சமூக மேம்பாட்டிற்கான தனது நீண்டகால அர்ப்பணிப்பைத் தொடரும் வகையில் செலான் வங்கி பிஎல்சி, தும்மலசூரிய, மடகம, நங்கடவர கனிஷ்ட வித்தியாலயத்தில் தனது 292வது ‘பஹசர’ நூலகத்தை திறந்துள்ளது. இத் திறப்பு விழா, 2026, மே மாதம் 21 ஆம் திகதி சிலாபப் பிரிவுக் கல்விப் பணிப்பாளர் J P C K ஜயலத், நங்கடவர கனிஷ்ட வித்தியாலய அதிபர் H.T. சந்தன, செலான் வங்கியின் வடமேற்கு II பிராந்திய முகாமையாளர் உபேந்திர அதிகாரி, செலான் வங்கியின் தும்மலசூரிய கிளை முகாமையாளர் அஜித் ரொட்ரிகோ, செலான் வங்கியின் வடமேற்கு II பிராந்திய அபிவிருத்தி சந்தைப்படுத்தல் அதிகாரி அரவிந்த திசாநாயக்க மற்றும் செலான் வங்கியின் வர்த்தகநாமச் சந்தைப்படுத்தல் முகாமையாளர்        G. விசாகன் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

செலான் வங்கியும் பாடசாலை சமூகமும் இணைந்து ஏற்பாடு செய்த, மாணவர்களை மையமாகக் கொண்ட ஈடுபாட்டுச் செயல்பாடுகளை உள்ளடக்கிய ​​‘பஹசர வாரம்’ வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, புதிதாகப் புனரமைக்கப்பட்ட நூலகம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது. இம் முன்னெடுப்பின் ஒரு பகுதியாக மாணவர்கள் கல்வி மற்றும் டிஜிட்டல் கற்றல் வளங்களை அணுகுவதை வலுப்படுத்தும் நோக்கில், செலான் வங்கி இரண்டு மடிக்கணினிகள், திரையுடன் கூடிய திரைப்பட வீழ்த்தி மற்றும் தொடர்புடைய புத்தகங்களை நன்கொடையாக வழங்கியது.

மாணவர்களிடையே படைப்பாற்றல், குழுப்பணி மற்றும் நிதி தொடர்பான விழிப்புணர்வை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ‘பஹசர வாரம்’, தரம் 10 மற்றும் 11ஐச் சேர்ந்த மாணவர்களுக்கான கிரிக்கெட் போட்டி, சமையல் செயல்விளக்க நிகழ்ச்சி, புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கான சித்திரப் போட்டி மற்றும் தரம் 9, 10, 11ஐச் சேர்ந்த மாணவர்களுக்கான நிதிக் கல்வியறிவு நிகழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளைக் கொண்டிருந்தது.

இந்நிகழ்வில் பேசிய செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பிரிவு உதவிப் பொது முகாமையாளர் ஆசிரி அபயரத்ன, “நாடெங்கிலும் 300 ‘பஹசர’ நூலகங்களை நிறுவும் எமது உறுதிப்பாட்டை நிறைவேற்றும் நோக்கில் செலான் வங்கி ஸ்திரமாக முன்னேறி வரும் வேளையில், 292 ஆவது நூலகத் திறப்பு விழா மற்றொரு அர்த்தமுள்ள மைல்கல்லாக விளங்குகிறது. இம் முன்னெடுப்பின் ஊடாக நாங்கள் கல்வியில் தொடர்ந்து முதலீடு செய்து வருகிறோம். மாணவர்களுக்கு மேம்பட்ட அறிவு, டிஜிட்டல் கற்றல் கருவிகள் மற்றும் நிதிசார் எழுத்தறிவு ஆகியவற்றை வழங்கி இலங்கையின் வருங்கால சந்ததியினரை ஊக்குவிக்கின்றோம்.” என்றார்.

ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் நிகழ்ச்சி முழுவதும் தங்கள் ஆதரவை வழங்கினர். இவ் ஆதரவு இம் முன்னெடுப்பின் வெற்றிக்குப் பங்களித்ததோடு, ‘பஹசர வாரத்தின்’ அனைத்து நடவடிக்கைகளிலும் ஆர்வமான பங்கேற்பையும் உறுதி செய்தது.

2013 மார்ச் 1 அன்று தொடங்கப்பட்ட செலான் ‘பஹசர’ நூலகத் திட்டம், செலான் வங்கியின் முதன்மையான சமூக நிலைத்தன்மைக்கான முயற்சியாகத் திகழ்கிறது. இத்திட்டம் வருங்கால சந்ததியினரை முன்னேற்றுவதில் கல்வியை மையமாக வைத்து ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இத் திட்டத்தின் ஊடாக செலான் வங்கி, நூலக உட்கட்டமைப்பு வலுப்படுத்தல் மற்றும் அத்தியாவசிய கற்றல் கருவிகளுக்கான அணுகலை விரிவுபடுத்தல் என்பவற்றின் மூலம் நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளுக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வருகிறது. மேலும் இது இலங்கை முழுவதும் அறிவைக் கட்டியெழுப்புவதற்கும் நிதிசார் எழுத்தறிவை வளர்ப்பதற்கும் நீடித்த சமூகத் தாக்கத்தை உருவாக்குவதற்குமான செலான் வங்கியின் அர்ப்பணிப்பை மேலும் உறுதிப்படுத்துகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *