பட்டலந்த வதைக்கூடத்தின் பின்னணியில் இருந்தவர்களை நிச்சயம் தண்டிக்குமாறு இராமலிங்கம் சந்திரசேகர் வலியுறுத்து!

1977 ஆம் ஆண்டு முதல் 1994 ஆம் ஆண்டு வரை இந்நாட்டை கொலை களமாக்கிய ஐக்கிய தேசியக் கட்சியே பட்டலந்த வதைக்கூடத்தின் சூத்திரதாரிகள் என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

பட்டலந்த வதைக்கூடத்தின் பின்னணியில் இருந்தவர்கள் நிச்சயம் தண்டிக்கப்பட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

பட்டலந்த வதைக்கூடம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தின் போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் இதன் போது தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

“நல்ல வழியில் நாம் அரசியலை முன்னெடுத்து வந்த வேளை 1983 ஆம் ஆண்டு எமது கட்சி தடைசெய்யப்பட்டது. ஜுலை கலவரத்தை அடிப்படையாகக்கொண்டே எமது கட்சிமீது தடை விதிக்கப்பட்டது. அன்று ஏற்பட்ட கறுப்பு ஜுலையென்பது இன்றளவிலும் கறுப்பு புள்ளியாகவே இருந்துவருகின்றது.

தடையை நீக்குமாறு ஜனாதிபதி முதல் பலரிடம் கோரிக்கை விடுத்தோம். பலன் கிட்டவில்லை. இதற்கிடையில் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டு எமது உறுப்பினர்களை கொன்றொழித்தனர்.

நாட்டை நாசமாக்குகின்ற ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டவேளை, நாடு காட்டிக்கொடுக்கப்பட்ட போது தான் அதற்கு எதிராகவே 1987 மற்றும் 1989 ஆம் ஆண்டுகளில் வீரமறவர்கள் வீறுகொண்டெழுந்தனர். அவர்கள் கொன்று புதைக்கப்பட்டனர். இவ்வாறு புதைக்கப்பட்டவர்கள் விதைக்கப்பட்டவர்களாக மீண்டெழுந்திருக்கின்றார்கள்.

உண்மையை ஒருபோதும் மூடிமறைக்க முடியாது. உண்மைகள் தற்போது வெளிவர ஆரம்பித்துள்ளன.

பட்டலந்த வதைக்கூடம் கொலையாளிகள், சித்திரைவதை செய்தவர்கள், இதற்கு காரணகர்த்தாவாக இருந்தவர்களுக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.

வடக்கு மற்றும் மலையக மக்களுக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கெல்லாம் நீதி கிடைக்க வேண்டும்.” என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *