நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
யானை தாக்கியதில் ஒருவர் காயம்
ஹட்டன், கொட்டகலை நகரில் அமைந்துள்ள கோவில் ஒன்றின் திருவிழாவிற்குக் கொண்டு வரப்பட்ட யானை, இளைஞர் ஒருவரைத் தாக்கிக் காயப்படுத்தியுள்ளது.
கோவில் ஊர்வலம் முடிந்து, யானையைக் கோவில் கம்பத்தில் கட்டி வைத்து ஓய்வெடுக்க வைத்தபோது, ஒரு இளைஞன் யானைக்கு உணவளிக்க முயன்றதாகவும், யானை திடீரென அந்த இளைஞனைத் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
யானையின் தாக்குதலில் காயமடைந்த இளைஞன் கொட்டாகலைப் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
காயமடைந்தவரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏதும் இல்லை எனத் திருவிழா ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
யானைப் பாகன் அதிக குடிபோதையிலிருந்ததால் தாக்கப்பட்ட இளைஞன், யானைக்கு உணவளிக்க முன்வந்துள்ளதாக விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

