யாழ் பொலிஸாரின் மோசமான செயல் …துப்பாக்கி முனையில் இழுத்து செல்லப்பட்ட இளைஞன்

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் நடத்திய கூட்டத்திற்கு செல்லவில்லை எனக் கூறி ஒரு இளைஞனை கைது செய்து, மனிதாபிமானமற்ற முறையில் அவரை அழைத்துச் சென்றதாக பொலிஸார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது:

மருதங்கேணி பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் உள்ளூராட்சி வேட்பாளர்களுக்கான ஒரு சந்திப்பை பொலிஸார் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்தச் சந்திப்புக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளரான ஜெகதீஸ்வரன் சற்குணாதேவி செல்லவில்லை.

அதனைத் தொடர்ந்து, துப்பாக்கிகளுடன் அவரது வீட்டிற்கு சென்ற பொலிஸார், சந்திப்புக்கு அழைப்பு விடுத்தும் ஏன் வரவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு அவர், தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் பருத்தித்துறை பிரதேச சபைக்கு தாக்கல் செய்த வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதால், தான் இப்போது வேட்பாளர் இல்லை என்ற காரணத்தை கூறி, சந்திப்புக்கு வரவில்லை என பொலிஸாருக்கு பதிலளித்தார்.

அதற்கு பொலிஸார், தாங்கள் அழைத்தால் பொலிஸ் நிலையத்திற்கு வர வேண்டும் என அவரை அச்சுறுத்தி, வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை அவதானித்த சற்குணாதேவியின் மகன், தனது தாயை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொள்ள வேண்டாம் என பொலிஸாரிடம் கோரியபோது, பொலிஸார் அவருடன் முரண்பட்டனர்.

பின்னர், மேலங்கி இல்லாமல், சாரத்துடன் குறித்த இளைஞனை கைது செய்த பொலிஸார், சாரத்தைப் பிடித்து இழுத்துச் செல்லும்போது சாரம் அவிழ்ந்ததை கவனிக்காமல், மனிதாபிமானமற்ற முறையில் அவரை பொலிஸ் நிலையத்திற்கு இழுத்துச் சென்றனர்.

மேலங்கி இல்லாமல், சாரம் அவிழ்ந்த நிலையில் வீதியில் இளைஞனை பொலிஸார் இழுத்துச் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ள நிலையில், பல தரப்பினரும் பொலிஸாரின் இந்த செயற்பாட்டிற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *