ரயில் நிலைய பொறுப்பதிகாரிககளின் வேலை நிறுத்தம் நியாயமற்றது – போக்குவரத்து சபை

மக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தி, தீர்வுகள் வழங்கப்பட்டிருந்த போதிலும், ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நியாயமற்ற முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

பல கோரிக்கைகளை முன்னிறுத்தி, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் நேற்று (16) நள்ளிரவு முதல் மேற்கொண்ட ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை பதவி உயர்வு வழங்குவதில் தாமதம் செய்தல் மற்றும் புதிய ஆட்சேர்ப்பு செயல்முறையை செயல்படுத்தாமை ஆகிய இரண்டு முக்கிய கோரிக்கைகளை முன்னிறுத்தி, ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் இந்த வேலைநிறுத்தத்தை ஆரம்பித்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கோரிக்கைகளுக்கு அமைச்சு மட்டத்தில் தீர்வுகள் வழங்கப்பட்டிருந்தும், அவை செயல்படுத்தப்படாததற்கு திணைக்களத்தின் திறனற்ற தன்மையே காரணம் என அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மக்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் வகையில் உடனடி வேலைநிறுத்தம் மேற்கொள்வது, அரசாங்கத்தை அசௌகரியப்படுத்தவும், மக்களை பாதிக்கவும் முயல்வதாக உள்ளது என அமைச்சு தெரிவித்துள்ளது.

ரயில் சேவையை பராமரிக்க அமைச்சு மற்றும் அரசு அனைத்து வகையிலும் தலையீடு செய்யும் எனவும் அமைச்சு வலியுறுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *