“Clean Sri Lanka”திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை திறம்பட பயன்படுத்த ஆலோசனை கூட்டம்

அரசாங்கத்தின் முதன்மைத் திட்டமாக செயற்படுத்தப்படும் “Clean Sri lanka” வேலைத்திட்டத்திற்காக இந்த ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள 05 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டை, வேலைத்திட்டத்தின் முதன்மை நோக்கங்களை அடைவதற்கு திறம்பட பயன்படுத்துவது தொடர்பிலான கலந்துரையாடல் இன்று (மார்ச் 18) இடம்பெற்றது.

“கிளீன் ஸ்ரீலங்கா” வேலைத்திட்டத்தின் மேலதிக செயலாளர் பொறியியலாளர் எஸ்.பி.சி. சுகீஸ்வர தலைமையில் இன்று கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு முன்னால் உள்ள சார்டட் கட்டிடத்திலேயே இந்த கூட்டம் இடம்பெற்றது.

நாட்டில் ஒழுக்கநெறி, சமூக மற்றும் சூழல் என்ற அனைத்து துறைகளிலும் புதிய மாற்றத்தை எதிர்பார்த்து, “Clean Sri Lanka” வேலைத்திட்டம் நாடு முழுவதும் ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைவாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

“Clean Sri Lanka” வேலைத்திட்டம் தொடர்பில் ஒவ்வொரு நிறுவனமும் செயல்படுத்தவேண்டிய திட்டங்களும் அவற்றை செயற்படுத்தும் போது எழுந்துள்ள சவால்கள் மற்றும் நிதித் தேவைகள் குறித்து விரிவாக இங்கு கலந்துரையாடப்பட்டன.

அதனடிப்படையில் குறித்த அமைச்சுகள் மற்றும் திணைக்களங்களுக்கான முன்னுரிமைகள் அடையாளம் காணப்பட்டு, நிதி ஒதுக்கீடுகளை வழங்குவது குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இந்த முக்கிய கலந்துரையாடலில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு, இலங்கை போக்குவரத்து சபை, வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, நகர அபிவிருத்தி நிர்மாணம் மற்றும் வீடமைப்பு அமைச்சு, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு ஆகிய அமைச்சுகள் மற்றும் நிதி ஆணைக்குழு, மேல் மாகாண மாநகர சபைகள், மேல் மாகாண கழிவு முகாமைத்துவ அதிகாரசபை போன்ற துறைசார் நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தி சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் “Clean Sri Lanka” திட்டத்தின் அதிகாரிகள் இந்தக் கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *