65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை ஜெயிலர்கள், சப்-ஜெயிலர்கள், ஜெய்லர் சார்ஜென்ட்கள், காப்பாளர்கள் (Guards), செவிலியர்கள் மற்றும் மருந்தாளர்கள் ஆகிய பதவிகளுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விபரங்களையும் விண்ணப்ப முறைகளையும் சிறைச்சாலைத் துறையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுக்குள்
மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை நிலைமை தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த சிறைச்சாலையில் உள்ள இரு கைதிகள் குழுக்களுக்கு இடையே இந்த மோதல் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனைக் கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
எனினும், மோதலை கட்டுப்படுத்த முடியாத நிலை காரணமாக, நேற்று (22) இரவு கண்ணீர்ப்புகைத் தாக்குதலையும் மேற்கொள்ள வேண்டியதாயிற்று என பொலிஸார் தெரிவித்தனர்.
நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையையும் அழைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கைதியை வேறொரு சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்ல முயற்சித்தபோது இந்த பதற்றமான நிலைமை உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
அப்போது, ஒரு கூண்டில் இருந்து வெளியே வந்த சுமார் 500 கைதிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியின்மையுடன் நடந்து கொண்டதால் இந்த நிலைமை ஏற்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

